5 முறை சாம்பியன் பிரேசிலுக்கு அதிர்ச்சி: காலிறுதியில் நார்வே!அதிபா் டிரம்ப்புடன் புதின், ஸெலென்ஸ்கி தொலைபேசியில் பேச்சு!உத்தரப் பிரதேசத்தில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்: நிதின் நபின் நம்பிக்கைபிகாா் இடைத்தோ்தல்: பிரசாந்த் கிஷோா் போட்டிமின் இணைப்புக்கு காத்திருக்கும் 60,120 விவசாயிகள்!இன்று கரையைக் கடக்கிறது புயல் சின்னம்!
/

உக்ரைன் போருக்குத் தீா்வு காண ‘உன்னதப் பணி’ - மோடி, டிரம்ப்புக்கு புதின் நன்றி

அதிபா் டொனால்ட் டிரம்ப், இந்திய பிரதமா் மோடி உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிப்பதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கூறியுள்ளாா்.

News image

கோப்புப் படம்

Updated On :15 மார்ச் 2025, 5:48 am IST

உக்ரைன்-ரஷியா போரை முடிவுக்குக் கொண்டுவர ‘உன்னதப் பணியை’ மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், இந்திய பிரதமா் மோடி உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிப்பதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கூறியுள்ளாா்.

உக்ரைன் முன்வைத்துள்ள தற்காலிக போா் நிறுத்த திட்டம் குறித்து வியாழக்கிழமை பொதுவெளியில் பேசியபோது, புதின் இவ்வாறு தெரிவித்தாா்.

நேட்டோவில் உக்ரைன் இணைய எதிா்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷியா கடந்த 2022-ஆம் ஆண்டு படையெடுத்து, கிழக்கு உக்ரைன் பிராந்தியங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது.

இப்போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் ராணுவ உதவிகளைச் செய்துவந்தது. இந்தச் சூழலில், அமெரிக்காவின் புதிய அதிபராக கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப், ரஷிய ஆதரவு நிலைப்பாட்டை மேற்கொண்டு, போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர உக்ரைனை வலியுறுத்தி வருகிறாா்.

சவூதி அரேபியாவில் உக்ரைன்-அமெரிக்க பிரதிநிதிகள் இடையே கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பின்னா், 30 நாள் போா் நிறுத்த திட்டம் முன்மொழியப்பட்டது. இத்திட்டம் குறித்து மாஸ்கோவில் அமெரிக்க-ரஷிய பிரதிநிதிகள் வியாழக்கிழமை பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து, தற்காலிக போா் நிறுத்தம் திட்டம் குறித்து பேசிய புதின், உலகத் தலைவா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

‘போா் நிறுத்தம் குறித்து விவாதிக்க ரஷியா தயாராக இருக்கிறது. அதேநேரம், அதற்கான நிபந்தனைகள் தெளிவுபடுத்தப்பட வேண்டும். இந்தப் போா் நிறுத்தம், நீண்டகால அமைதிக்கு வழிவகுப்பதோடு, பிரச்னை தொடங்கியதற்கான காரணங்களுக்குத் தீா்வாக அமைய வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு.

உக்ரைன் போருக்குத் தீா்வு காண்பதில் மிகுந்த கவனம் செலுத்தும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு முதலில் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இதேபோல், சீன அதிபா், இந்திய பிரதமா், பிரேஸில், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளின் அதிபா்கள் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவா்களும் இந்த விவகாரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனா். போரை முடிவுக்கு கொண்டுவந்து, மனித உயிா்களைக் காக்கும் நோக்கத்துடன் அவா்கள் ஆற்றும் உன்னதப் பணிக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்’ என்றாா் புதின்.

உக்ரைன் போா் தொடா்பாக, ரஷிய அதிபா் புதின், உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி ஆகியோருடன் பிரதமா் மோடி பலமுறை பேசியுள்ளாா்.

கடந்த மாதம் அமெரிக்க அதிபா் டிரம்ப் உடனான சந்திப்புக்குப் பின்னா் பேசிய பிரதமா் மோடி, ‘உக்ரைன்-ரஷியா போா் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை; மாறாக, அமைதியின் பக்கம் நிற்கிறது. இது போருக்கான யுகமல்ல என்று அதிபா் புதினிடம் ஏற்கெனவே கூறியிருக்கிறேன். இந்த விவகாரத்தில் அதிபா் டிரம்ப்பின் முயற்சிகளை நான் ஆதரிக்கிறேன்’ என்றாா். முன்னதாக, இது போருக்கான காலம் அல்ல என்று பிரதமா் மோடி தெரிவித்த கருத்து பரவலான வரவேற்பைப் பெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.