மகாராஷ்டிரத்தில் முகலாய மன்னர் ஒளரங்கசீப் கல்லறையை இடிப்பதற்கான வன்முறைக் கலவரங்கள் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
ஒளரங்கசீப் 1618 ஆம் ஆண்டு பிறந்து 1707-ல் மரணமடைந்தார். இந்தியாவை அதிக காலம் ஆண்ட முகலாய மன்னர். அதனாலேயே, வரலாற்றில் ஒளரங்கசீப்புகான இடம் கூடுதலாகவே அமைந்தது. அவர் நல்ல ஆட்சியாளர்தானா? என்கிற விவாதங்களே ஓயாத நிலையில் கூடுதலாக இன்னொரு கூட்டம் ஒளரங்கசீப்பின் கல்லறையை இடித்தே ஆக வேண்டும் என வன்முறைகளில் இறங்கியுள்ளனர்.
இந்து கோவில்களைத் தகர்த்தார், கட்டாய மதமாற்றங்களை மேற்கொண்டார் என ஒளரங்கசீப் மீது வலதுசாரி அமைப்புகள் குற்றச்சாட்டுகளை அடுக்குகின்றனர். ஆனால், 300 ஆண்டுகளுக்கு மேலாக பராமரிக்கப்பட்டு வந்த கல்லறையைத் திடீரென இடிக்க கிளம்பியதற்கு ஒரே காரணம், விக்கி கௌஷல் நடிப்பில் வெளியான சாவா திரைப்படம்தான். மகாராஷ்டிர சட்டப்பேரவையில் அம்மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸே இந்தக் காரணத்தைச் சொல்லியிருக்கிறார்.
படத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் மகன் சம்பாஜி (விக்கி கௌஷல்) இந்து மதக்காவலராக காட்டப்படுகிறார். இன்னொரு புறம் ஒளரங்கசீப் பல இந்துக்களை இஸ்லாமியர்களாக மதம் மாற்ற கட்டாயப்படுத்தும் காட்சிகள். கிளைமேக்ஸில், தூண்களில் சம்பாஜியைக் கட்டிப்போட்டு மதம் மாறினால் உயிருடன் விடுகிறேன் என ஒளரங்கசீப் சொல்கிறார். சம்பாஜி மறுக்க, அவரது உடலை நார்நாராகக் கிழித்து அதில் உப்பு தடவி, இரு கண்களையும் பொசுக்கி ஒளரங்கசீப் படையினர் சித்தரவதை செய்து கொல்வதுபோல் படம் முடிகிறது. இதைப்பார்த்த ரசிகர்களில் பலருக்கு கண்ணீர் வர, இதுதான் நேரம் என இந்தக் கண்ணீரை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டனர் சில வலதுசாரி அமைப்புகள்.
இப்படியொரு சர்வதிகாரியின் கல்லறை நம்மூரில் இருக்கலாமா? என கொந்தளித்த வன்முறையாளர்கள் அதை இடிப்பதற்கான கலவரத்தில் இறங்கியதால் மகாராஷ்டிரத்தின் நாகபுரி நகரில் கடந்த திங்கள்கிழமையன்று வன்முறை வெடித்ததில் பலர் காயமடைந்ததுடன் பல வீடுகள் மற்றும் உடமைகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால், ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது.
இந்தியாவை நீண்ட காலம் ஆண்ட முகலாய மன்னர்களில் ஒருவரான ஒளரங்கசீப் சர்வாதிகாரத் தன்மையுடனே செயல்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் உண்டு. ஆனால், தான் மறைந்ததும் தன்னுடைய கல்லறை மிக எளிமையானதாக, உள்ளே வர எந்த சிரமமும் இன்றி இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இதனாலயே, ஒளரங்கசீப் கல்லறை எந்த ஆடம்பர வேலைப்பாடுகளும், சலவைக்கல் தூண்களும் இல்லாமல் மேல் பாகத்தில் மண் தெரிய, கல்லறை ஒரு சாதாரண வெள்ளைத் துணியால் மூடப்பட்டு சமாதியின் மீது ஒரு செடி நடப்பட்டுள்ளது. இவ்வளவுதான் ஒரு பேரரசனுக்கான கல்லறை. கட்டடக் கலைக்கு பெயர்பெற்ற முகலாய வம்சத்தில் பிறந்த ஒளரங்கசீப், மிக பிரம்மாண்டமான கல்லறையைக் கட்ட சொல்லியிருக்கலாம். ஆனால், மகாராஷ்டிர மாநிலம் ஒளரங்கபாத் மாவடத்திலுள்ள குல்தாபாத்திலில் மிக எளிமையாக ஒளரங்கசீப் கல்லறை இருக்கிறது.
கிரேக்க பேரரசன் அலெக்ஸாண்டர், ‘இந்த உலகையே வென்றவன், இறப்பிற்குப் பின் ஒரு பிடி மண்ணைக்கூட கொண்டு போகவில்லை’ என்கிற உண்மையைச் சொல்ல சவப்பெட்டியிருந்து இரு கைகளும் வெளியே தெரிய ஊர்வலமாகத் தன் உடலை எடுத்துச் செல்ல பணித்தார்.
அப்படி, மரணத்திற்குப் பின் நாம் ஒன்றுமே இல்லை என்பதைக் கூறவே தன் கல்லறையை ஒளரங்கசீப் மிக எளிமையாக அமைக்கச் சொன்னார் என வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முக்கியமாக, இந்தக் கல்லறை தன் ஆன்மீக வழிகாட்டியான சூஃபி துறவி சையது ஜைனுதீன் கல்லறை வளாகத்திற்குள் அமைய வேண்டும் என ஒளரங்கசீப் விருப்பப்பட்டிருக்கிறார். அதேபோல், அவர் மறைந்ததும் உடல் இன்றைய குல்தாபாத்திற்கு எடுத்து வரப்பட்டு மரப்பலகையால் செய்யப்பட்ட சவப்பெட்டிக்குள் கிடத்தப்பட்டு மிக சாதாரண மனிதனுக்கான அடக்கமாகவே நிகழ்ந்திருக்கிறது. இன்றும், அந்த எளிமை அப்படியே பராமரிக்கப்பட்டும் வருகிறது.
பிரிட்டிஷ் இந்தியாவின் ஒளரங்கசீப் என அறியப்பட்ட கர்சன் பிரபு 1905 ஆம் ஆண்டு ஒளரங்கசீப் கல்லறைக்கு வந்து, ‘ஒரு பேரரசனின் கல்லறை இப்படி இருக்கக் கூடாது’ என பளிங்கு கற்களால் ஆன பாதுகாப்பு வளையத்தை அமைக்கும் வரை திறந்தவெளி கல்லறையாக இது இருந்திருக்கிறது.
மக்கள் ரத்தத்தின் மீது நடந்த சர்வதிகார மன்னர்களின் வரலாறுகள் உலகம் முழுவதும் உண்டு. இப்போது, யாரும் திரும்பிப் பார்த்து அம்மன்னர்களின் கல்லறைகளையும் நினைவுச் சின்னங்களையும் தேடி அழிப்பதில்லை. இந்தியாவில் மட்டும் ஏன் இந்த அவல அரசியல் நடக்கிறது என்பதே பலரது கவலையாக இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.