இந்திய ஆன்லைன் கேமிங் துறை வர்த்தகம் 2029-க்குள் ரூ. 78,000 கோடியைத் தாண்டும்!

இந்திய ஆன்லைன் கேமிங் துறை பற்றி...
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
2 min read

இந்தியாவில் ஆன்லைன் கேமிங் துறை வர்த்தகம் வருகிற 2029 ஆம் ஆண்டுக்குள் ரூ. 78,000 கோடியைத் தாண்டும் என அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் கேம் டெவலப்பர்கள் மாநாடு நடைபெற்றது. இதில், பணம் செலுத்தி விளையாடும் கேமிங் தளமான வின்ஸோ கேம்ஸ் (WinZo) மற்றும் பொழுதுபோக்கு கவுன்சில் (ஐஈஐசி) இணைந்து இந்திய கேமிங் துறை வர்த்தகம் பற்றிய அறிக்கையை வெளியிட்டனர்.

அந்த அறிக்கையில், ’இந்திய ஆன்லைன் கேமிங் துறையின் வருமானம் 2024 ஆம் ஆண்டில் ரூ. 32,000 கோடியாக இருந்தது. இதில், உண்மையான பணம் செலுத்தி விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகள் 86% பங்குகளைப் பெற்றுள்ளன’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

”இந்திய ஆன்லைன் கேமிங் துறையின் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் உள்ளது. இது வருகிற 2029 ஆம் ஆண்டுக்குள் ரூ. 78,000 கோடியைத் தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் 2029 ஆம் ஆண்டுக்குள் ரூ. 5 லட்சம் கோடி முதலீட்டை ஈர்க்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தொழில்நுட்பங்கள், ஐபி உருவாக்கம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளின் ஈடுபாட்டில் தொடர்ந்து நாம் நமது எல்லைகளை விரிவுபடுத்தி வந்தால், வின்ஸோ நிறுவனம் இந்தியாவை உலகின் கேமிங் மையமாக மாற்றுவதில் உறுதியாக உள்ளது” என வின்ஸோ கேமிங் நிறுவன துணை நிறுவனர் பாவன் நந்தா தெரிவித்துள்ளார்.

அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் 59 கோடி கேமர்கள் உள்ளனர். மொத்தம் 1100 கோடி அளவிலான கேம் செயலிகளின் பதிவிறக்கங்களுடன் உலகின் 20% கேமர்கள் இந்தியாவில் உள்ளனர். கூகுள் ப்ளேஸ்டோருக்கு மாற்றாக பல தளங்கள் மூலம் இவை பதிவிறக்கம் செய்யப்படுகின்றன.

இந்தத் துறையில் மொத்தம் 1900 கேமிங் நிறுவனங்கள் 1.3 லட்சம் திறன் வாய்ந்த நிபுணர்களைப் பணியமர்த்தியுள்ளனர். இதில், அந்நிய நேரடி முதலீடாக ரூ. 26,000 கோடி பெறப்பட்டுள்ளது.

கேமிங் துறையில் உண்மையான பணம் செலுத்தி விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகள் தற்போது 85.7% ஆக உள்ளது. அது 2029 ஆம் ஆண்டில் 80 % ஆக குறையும் என்றும் பணம் செலுத்தாமல் விளையாடும் விளையாட்டுகளின் வளர்ச்சி 14.3% முதல் 20% வரை உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம், வளர்ந்து வரும் கேம் டெவலப்பிங் துறை, சாதகமான நடைமுறை ஆகியவற்றால் இந்தத் துறையின் சந்தை மதிப்பு 2034 ஆம் ஆண்டுக்குள் ரூ.5 லட்சம் கோடி உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதில் 20 லட்சத்திற்கும் அதிகமான புதிய வேலைகளை உருவாக்குவது, அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிப்பது மற்றும் இந்திய அறிவுசார் சொத்து (ஐபி) ஏற்றுமதி ஆகியவை அடங்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com