வெளிநாட்டிலிருந்து ரூ.22 கோடிக்கு இறக்குமதியான செடிகள்! ஜெகன்மோகனின் மாளிகை!!

வெளிநாட்டிலிருந்து ரூ.22 கோடிக்கு இறக்குமதியான செடிகள் ஜெகன்மோகனின் ருஷிகொண்டா மாளிகை பற்றி..
மலையில் அரண்மனை
மலையில் அரண்மனை
Published on
Updated on
2 min read

ஒரு சில ஆயிரங்கள் இல்லாததால் சேதமடைந்த குடிசைவீட்டை சீரமைக்க முடியாமல் வாழ்ந்துவரும் எண்ணற்ற ஏழைகள் இருக்கும் இந்த நாட்டில்தான், ஒரு மலையையே தகர்த்து மாளிகைக் கட்டிய சம்பவங்களும் நடந்தேறியிருக்கின்றன.

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ருஷிகொண்டா மலையை தகர்த்துக் கட்டியிருக்கும் மாளிகைப் பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள ருஷிகொண்டா மலையின் பெரும்பகுதியை இடித்துத் தகர்த்து, ஜெகன்மோகன் ரெட்டி, அதில் ரூ.500 கோடி மதிப்பில் கட்டிய அரண்மனையின் விடியோ அண்மையில் வெளியாகி பேசுபொருளாகியிருந்தது.

இந்த அரண்மனையைப் பார்ப்பதற்கும், அரண்மனைக்குள்ளிருந்து பார்த்தால் கடல் பரப்பும், உண்மையிலேயே இப்படியொரு இடத்தை உலகில் வேறெங்கும் பார்க்க முடியாதோ என்ற கேள்வியை ஏற்படுத்துகிறது.

விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள ருஷிகொண்டா மலையின் ஒரு பகுதியை இடித்துத்தரைமட்டமாக்கி, அதில் மிகப்பெரிய அரண்மனையை சப்தமில்லாமல் கட்டியிருக்கும் ஜெகன்மோகன் ரெட்டி மீது நடவடிக்கை எடுத்து, அரண்மனையை பூட்டி சீல் வைப்பதா? அல்லது அதனை ஆந்திர அரசுக்குச் சொந்தமாக்குவதா என்று ஒரு பக்கம் சட்ட விவாதங்கள் நடந்து வருகின்றன.

வெளித்தோற்றமே மெய்மறந்து போகும் வகையில் இருக்கிறது. உள்கட்டமைப்பைப் பற்றி வரும் தகவல்களோ தங்கத்தால் இழைத்து செய்திருப்பதாகக் கூறுகிறது. இத்தாலி மார்பிள் கற்கள் தரைக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளனவாம்.

வேறென்ன?

மலையைத் தகர்த்து சமநிலைப்படுத்த மட்டும் ரூ.95 கோடி செலவிடப்பட்டுள்ளதாம். இங்கு இருக்கும் மரம், செடி, கொடிகள் எல்லாமே வேறு எங்கும் பார்த்திராத வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக வெளிநாட்டிலிருந்து ரூ.22 கோடி செலவிட்டு செடிகள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்கிருக்கும் ஒரே ஒரு குளியல்தொட்டியின் விலை மட்டும் ரூ.25 லட்சம் என்றும், பொருத்தப்பட்டிருக்கும் குழாய்கள் மட்டும் ரூ.5 கோடிக்கு வாங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த அரண்மனையின் கட்டமைப்புகளைப் பார்க்கும்போது, இது முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் முதல்வர் அலுவலகம் மற்றும் அதிகாரப்பூர்வ இல்லமாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு எதிராக இந்தக் கட்டடம் கட்டப்பட்டிருப்பதால், இது பொதுப் பயன்பாட்டுக்கு அனுமதி அளிப்பதில் சிக்கலும் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மலையைத் தகர்த்துக் கட்டப்பட்டிருக்கும் இந்த அரண்மனையிலிருந்து பார்த்தால் கடற்கரை தெரிகிறது. இந்த அரண்மனைக்குள் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி என அனைத்தும் எவ்வாறு கொண்டு வரப்பட்டது என்பது குறித்தும், விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சுற்றுலா மேம்பாட்டுத் திட்டம் என்ற பெயரில் விண்ணப்பிக்கப்பட்ட இந்த திட்டத்துக்கு, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கடந்த 2021ஆம் ஆண்டுமே மாதம் ஒப்புதல் வழங்கியிருக்கிறது.

இதுபோன்ற எத்தனையோ மலைவாழ் கிராமங்கள் பல நூற்றாண்டுகாலமாக சாலை, குடிநீர், மின் வசதியின்றி இருக்கும் நிலையில், ஒரு சில ஆண்டுகளில் இப்படியோர் அரண்மனை ஒரு மலைப் பகுதியில் ஏற்படுத்தப்பட்டு, அதுவும் இது தொடர்பான எந்த ஒரு தகவலும் வெளியாகாமல் கட்டி முடிக்கப்பட்டிருப்பது பலருக்கும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் கொடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com