
லண்டன் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களை சிறப்பாகக் கையாண்ட மமதா பானர்ஜியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, வியாழக்கிழமையில் லண்டனில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் கெல்லாக் கல்லூரியில் உரையாற்றினார்.
இதனிடையே, உரையின்போது குறுக்கிட்ட சில மாணவர்கள், மேற்கு வங்கத் தேர்தலின்போதான வன்முறை மற்றும் ஆர்ஜி கர் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை கொலை சம்பவங்கள் குறித்த கேள்விகளை எழுப்பினர். மேலும், மமதா பானர்ஜியின் உரையின்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவும் முயன்றனர்.
இருப்பினும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் மமதா கூறியதாவது ``மேற்கு வங்கத்தில் எங்களுடன் போராடும் அளவுக்கு, உங்கள் கட்சியினரின் பலம் அதிகரிக்க வேண்டும். ஆர்ஜி கர் வழக்கு நிலுவையில் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பு இப்போது மத்திய அரசின் கைகளில் உள்ளது. இந்த வழக்கு இனி எங்கள் கைகளில் இல்லை. இங்கு அரசியல் செய்ய வேண்டாம்; இது அரசியலுக்கான களம் அல்ல.
நாட்டின் பிரதிநிதியாக இங்கு வந்துள்ளேன். என்னை அவமதிப்பதன் மூலம் நம் நாட்டை அவமதிக்காதீர்கள்’’ என்று பதிலளித்தார்.
அதுமட்டுமின்றி, ஹிந்து எதிர்ப்பாளர் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டதையடுத்து, தான் எல்லா மதத்துக்கும் பொதுவானவர் என்றும் பதிலளித்தார்.
மமதாவின் பதிலுக்கு பார்வையாளர்களிடையே வரவேற்பு கிடைத்ததுடன், பார்வையாளர்களைக் கருத்தில்கொண்டு, ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளியேற்றப்பட்டனர். வெளிநாட்டில் ஆர்ப்பாட்டக்காரர்களை மமதா பானர்ஜி சிறப்பாகக் கையாண்டதாக பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.