
கர்னல் சோஃபியா குரேஷி பற்றி மத்தியப் பிரதேச பாஜக அமைச்சரின் சர்ச்சை கருத்து தொடர்பான வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் மே 19-க்கு ஒத்திவைத்துள்ளது.
பாகிஸ்தான் மீதான ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ராணுவத்தைச் சேர்ந்த கர்னல் சோஃபியா குரேஷி, விமானப்படையைச் சேர்ந்த விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் இணைந்து பத்திரிகையாளர் சந்திப்பு மூலம் விளக்கமளித்தனர்.
பெண் அதிகாரிகள் தலைமையில் தாக்குதல் நடைபெற்றதற்கு பலரும் பாராட்டு தெரிவித்த நிலையில், கா்னல் சோஃபியா குரேஷி குறித்து மத்தியப் பிரதேச மாநில பாஜக அமைச்சா் குன்வர் விஜய் ஷா பேசியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
'பஹல்காமில் நமது சகோதரிகளின் குங்குமத்தை அழித்தவா்களை அவா்களின்(பயங்கரவாதிகளின்) சகோதரியை வைத்தே பிரதமா் மோடி ஒழித்துவிட்டார்’ என்று விஜய் ஷா கூறியிருந்தார்.
கா்னல் சோஃபியா குரேஷி இஸ்லாமிய மதத்தைச் சோ்ந்தவா் என்பதால் அவரைத் பயங்கரவாதிகளின் சகோதரி எனச் சித்திரிக்கும் வகையில் அமைச்சா் பேசியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.
இந்த விவகாரம் பெரும் சா்ச்சையான நிலையில் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்பதாக விஜய் ஷா தெரிவித்தாா்.
இந்நிலையில் இதுதொடர்பாக தானாக முன்வந்து விசாரித்த மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம், அமைச்சர் விஜய் ஷா மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டது. அதன்படியே விஜய் ஷா மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.
தன் மீதான வழக்குப்பதிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் விஜய் ஷா தொடர்ந்த வழக்கை தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், அகஸ்டின் ஜார்ஜ் அமர்வு நேற்று அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்டது.
மேலும் அரசமைப்புப் பதவியில் இருக்கும் ஒருவர் எப்படி இப்படி பேசலாம்? என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
தொடர்ந்து இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் என். கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமைச்சர் குன்வர் விஜய் ஷா தரப்பு வழக்கறிஞர் கூடுதல் ஆவணங்களைச் சமர்ப்பிக்க அவகாசம் கோரியதை அடுத்து நீதிபதிகள் அனுமதியளித்தனர்.
மேலும் வழக்கின் விசாரணையை வருகிற திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.