
பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் எல்லை மக்களுக்கு உதவ இந்திய ராணுவம் இலவச மருத்துவ முகாமை நடத்தி வருகிறது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம், பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை மேற்கொண்டது. தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவமும் வடக்கு காஷ்மீரில் உள்ள உரி முதல் ஜம்முவில் உள்ள பூஞ்ச், ரஜோரி வரை கடுமையான தாக்குதல் நடத்தியது. இதில் இந்தியாவில் 16 பேர் உயிரிழந்ததாக மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், 50 பேர் வரையில் உயிரிழந்திருக்கலாம் என்று பாகிஸ்தான் தரப்பு கூறியது.
ரஜோரி, உரி, பூஞ்ச் பகுதிகளில் பலரது வீடுகள் தரைமட்டமாகியுள்ளன, பல வீடுகள் சேதமடைந்து வசிக்க முடியாத நிலை உள்ளது. ரஜோரியில் உள்ள ஒரு குடியிருப்புவாசி தனது வீட்டை இழந்து குடும்பத்துடன் தெருவில் நிற்பதாகவும் அரசு தனக்கு வீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேபோல பூஞ்ச் பகுதியில் குடும்பத் தலைவரை இழந்து மனைவி மற்றும் அவர்களது 6 குழந்தைகள் தவித்து வருகின்றனர். ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பலரும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
இந்நிலையில் இந்திய - பாகிஸ்தான் மோதலின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக இந்திய ராணுவம் பாரமுல்லாவின் உரி பகுதியில் இன்று இலவச மருத்துவ முகாமை ஏற்பாடு செய்துள்ளது. இதேபோன்று குப்வாரா, உரி உள்ளிட்ட பகுதிகளிலும் இந்திய ராணுவம் இலவச மருத்துவ முகாம்களை நடத்தியுள்ளது.
இந்திய ராணுவத்தினர் அங்குள்ள மக்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு தேவையான மருந்துகளை வழங்குகின்றனர்.
முன்னதாக இந்திய ராணுவத்தினர் பல பகுதிகளுக்குச் சென்று மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.