மும்பையில் தலைமை நீதிபதி கவாயை வரவேற்க வராத உயர் அதிகாரிகள்! காரணம் என்ன?

வரவேற்க உயரதிகாரிகள் யாரும் வராதது தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளதைப் பற்றி...
குடியரசுத் தலைவர் முர்மு முன்னிலையில் பதவியேற்றுக் கொண்ட நீதிபதி பி.ஆர். கவாய்.
குடியரசுத் தலைவர் முர்மு முன்னிலையில் பதவியேற்றுக் கொண்ட நீதிபதி பி.ஆர். கவாய்.
Published on
Updated on
2 min read

சமீபத்தில் பதவியேற்ற பின்னர் முதன்முறையாக மும்பைக்கு வந்திருந்தபோது, வரவேற்க மாநிலத்தின் உயரதிகாரிகள் யாரும் வராதது தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் கடும் அதிருப்தி தெரிவித்த நிலையில், ஏன் வரவில்லை? என்ன காரணம்? என்ற சர்ச்சை சமூக ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அவமதிக்கப்பட்டாரா, தலைமை நீதிபதி?

மும்பை தாதரில் மகாராஷ்டிரம் மற்றும் கோவா பார் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக, கடந்த ஞாயிறன்று, நாட்டின் 52-வது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றிருக்கும் பி.ஆர். கவாய் தனது சொந்த மாநிலமான மகாராஷ்டிரத்தின் மும்பைக்கு முதன்முதலாக சென்றிருந்தார்.

மரபார்ந்த நடைமுறையின்படி (ப்ரொடோகால்) அப்போது அங்கு அவரை வரவேற்க வந்திருக்க வேண்டிய மகாராஷ்டிர தலைமைச் செயலா், மாநில காவல் துறைத் தலைவர், மும்பை காவல் ஆணையர் உள்பட ஒருவரும் வரவில்லை; இவ்விஷயத்தைப் பின்னர் தாம் பங்கேற்ற நிகழ்ச்சியில் சுட்டிக்காட்டி நீதிபதி பி.ஆா். கவாய் அதிருப்தி தெரிவித்தார்.

அதிருப்தியில்...

இதுதொடர்பாக பாராட்டு விழாவில் உச்ச நீதிமன்றம் மற்றும் பம்பாய் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் நீதிபதி பி.ஆர். கவாய் பேசுகையில், “ஜனநாயகத்தின் தூணான நீதித்துறைக்கு, மற்ற துறைகள் காட்டும் இதுபோன்ற மரியாதை கவலையளிக்கிறது. இங்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான். நீதித்துறை, சட்டப்பேரவை, நிர்வாகம் ஆகிய மூன்றும் ஜனநாயகத்தின் மூன்று தூண்கள். இவை மூன்றும் இணைந்து செயல்பட வேண்டும். ஒவ்வொரு துறையும் மற்றொன்றுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்.

உயரதிகாரிகளுக்கு நெறிமுறைகள் இருக்கும். ஆனால், மாநில காவல் துறை தலைவர், மும்பை காவல் ஆணையர் வர விரும்பவில்லை என்றால் அதுபற்றி அவர்கள் தான் சிந்திக்க வேண்டும்.

நீதிபதிகளாகிய நாங்கள் நாட்டின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்கிறோம். நாங்கள் நாகாலாந்து, மணிப்பூர், அசாம் மற்றும் சமீபத்தில் அமிர்தசரஸுக்குச் சென்றோம். காவல் துறைத் தலைவர், தலைமைச் செயலர், காவல் ஆணையர் ஆகியோர் உடனிருந்தனர்.

நாங்கள் நான்கு வாரங்களுக்கு முன்பு ஜார்க்கண்டில் உள்ள தேவ்கருக்குச் சென்றோம். இது தலைநகர் ராஞ்சியில் இருந்து சுமார் 300 - 400 கி.மீ. தொலைவில் இருக்கிறது. தலைமைச் செயலர் மற்றும் உயரதிகாரிகள் பலரும் அங்குள்ள விமான நிலையத்திற்கு வந்திருந்தனர். ஆனால், இங்கே யாரும் வரவில்லை” எனப் பேசியிருந்தார்.

பின்னர், சில மணி நேரங்களில் தாதரில் உள்ள அம்பேத்கரின் நினைவிடமான சைத்ய பூமிக்கு தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் சென்றபோது, மகாராஷ்டிர மாநிலத் தலைமைச் செயலர் சுஜாதா சௌனிக், காவல் துறை தலைவர் ரஷ்மி சுக்லா, மும்பை காவல் ஆணையர் தேவன் பாரதி ஆகியோர் வந்திருந்தனர்.

தலைமை நீதிபதி வருகையின் மரபார்ந்த நடைமுறை என்ன?

இந்திய தலைமை நீதிபதி வருகையின்போது, ​​மாநில தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை இயக்குநர் ஆகியோர் வரவேற்க வேண்டும் என்பதே மரபார்ந்த நடைமுறை. மேலும், அவர்களுடன் காவல் ஆணையரும் இருப்பார். இது பொதுவான நடைமுறையாக உள்ளது.

தலித் நீதிபதி

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகத் தற்போது பதவியேற்றிருக்கும் நீதிபதி பி.ஆர். கவாய், இந்தப் பொறுப்பேற்கும் 2-வது தலித் என்பதுடன், புத்த மதத்தைச் சேர்ந்த முதல் தலைமை நீதிபதி என்ற பெருமையையும் பெற்றவர்.

தலித் என்பதால்தான் தலைமை நீதிபதியை வரவேற்க வராமல் இவர்கள் புறக்கணித்ததாகக் குறிப்பிட்டும், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்னவாக இருக்கும்? என்றும் சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க | நீதிபதி கவாயை வரவேற்க வராத உயர் அதிகாரிகள்... மகா., - கோவா வழக்குரைஞர்கள் சங்கம் கண்டனம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com