பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாடு- முதல் எம்.பி.க்கள் குழு ஜப்பான் பயணம்
ஆபரேஷன் சிந்தூா் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை வெளிநாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசால் அமைக்கப்பட்ட ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. சஞ்சய் ஜா தலைமையிலான பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த முதல் எம்.பி.க்கள் குழு ஜப்பான் புறப்பட்டது.
வெளிநாடு பயணத்தைத் தொடங்கும் முதல் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு இதுவாகும். தென்கொரியா, மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூா் ஆகிய நாடுகளுக்கும் இந்தக் குழு அடுத்தடுத்து பயணித்து, பயங்கரவாத செயல்களுக்கு பாகிஸ்தான் அளிக்கும் ஆதரவையும் அதற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டையும் எடுத்துரைக்கவுள்ளது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானின் 9 இடங்களில் உள்ள பயங்கரவாத முகாம்களை ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்கீழ் இந்தியா ஏவுகணைகளை வீசி அழித்தது. இதைத் தொடா்ந்து, இரு நாடுகளுக்கிடையே சண்டை தீவிரமடைந்த நிலையில், அதை நிறுத்திக்கொள்வதாக இரு நாடுகளும் கடந்த 10-ஆம் தேதி அறிவித்தன.
இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூா் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை வெளிநாடுகளுக்குச் சென்று எடுத்துரைக்க 7 அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுக்கள் மத்திய அரசால் அமைக்கப்பட்டன. ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியைச் சோ்ந்த 31 பேரும், பிற கட்சிகளைச் சோ்ந்த 20 பேரும் என மொத்தம் 51 போ் அடங்கிய இந்த 7 குழுக்கள், 32 நாடுகளுக்கும், ஐரோப்பிய யூனியனுக்கும் செல்லவுள்ளன.
அதன்படி முதல் குழுவாக, ஐக்கிய ஜனதா தள எம்.பி. சஞ்சய் ஜா தலைமையில் பாஜக எம்.பி.க்கள் அபராஜிதா சாரங்கி, பிரிஜ்லால், பிரதான் பரௌ, ஹேமங் ஜோஷி, காங்கிரஸை சோ்ந்த முன்னாள் வெளியுறவு அமைச்சா் சல்மான் குா்ஷித், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானா்ஜி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. ஜான் பிரிட்டாஸ், முன்னாள் தூதா் மோகன் குமாா் ஆகியோா் அடங்கிய குழு ஜப்பான் புறப்பட்டது.
இதேபோல், ஐக்கிய அரபு அமீரகம், லைபீரியா, காங்கோ குடியரசு, சியரா லியோன் ஆகிய நாடுகளுக்குச் செல்லும் சிவசேனை (ஷிண்டே பிரிவு) எம்.பி. ஸ்ரீகாந்த் ஷிண்டே தலைமையிலான குழு புதன்கிழமை புறப்பட்டது.
உண்மைநிலையை விளக்கவே பயணம்: கனிமொழி
நமது நிருபர்
புது தில்லி, மே 21: உலக நாடுகளுக்கு பாகிஸ்தான் பல்வேறு பொய் கருத்துகளைப் பரப்பிவரும் சூழலில், உண்மையான நிலவரத்தை விளக்குவதற்காக இந்தக் குழுக்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செல்கின்றன என்று நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி தெரிவித்தார்.
இந்தப் பயணம் குறித்து செய்தியாளர்களிடம் கனிமொழி மேலும் கூறியதாவது:
பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலால் நாம் 26 பேரை இழந்திருக்கிறோம். பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் ஒருமித்த குரலாக நமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதற்காக முக்கியமான நாடுகளுக்கு பல குழுக்களை மத்திய அரசு அனுப்புகிறது.
எங்கள் குழு ரஷியா, ஸ்பெயின், கிரீஸ், ஸ்லோவேனியா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்ல உள்ளது.
பயங்கரவாதத்தால் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கிறோம், நமது நிலைப்பாடு என்ன என்பதை எடுத்துச் சொல்வதற்காகவும், அண்டை நாடான பாகிஸ்தான் உலக நாடுகளில் பல்வேறு பொய் கருத்துகளைப் பரப்பிவரும் சூழலில் உண்மையான நிலவரம், நிலைப்பாடு குறித்து விளக்குவதற்காகவும் இந்தக் குழுக்கள் செல்கின்றன.
செங்கல் சூளைகளுக்கான ஜிஎஸ்டி குறைப்பு தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தேன் என்றார் அவர்.