
குஜராத்தில் கட்ச் மாவட்டத்தில் உள்ள ராணுவ நிலைகள் தொடா்பான புகைப்படங்கள், தகவல்களை பாகிஸ்தானைச் சோ்ந்த பெண் உளவாளிக்கு அளித்த சுகாதாரப் பணியாளரை அந்த மாநில பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினா் கைது செய்தனா்.
சாந்தேவ்சிங் கோகில் (28) என்ற அந்த நபா் குஜராத்தில் பாகிஸ்தான் எல்லையையொட்டி அமைந்துள்ள கட்ச் மாவட்டத்தில் மாநில சுகாதாரத் துறையில் ஒப்பந்தப் பணியாளராக இருந்து வந்தாா்.
எல்லை கிராமம் ஒன்றில் பணியாற்றிய இவரிடம் கடந்த 2023-ஆம் ஆண்டு அதிதி பரத்வாஜ் என்ற பெண் வாட்ஸ்ஆப் மூலம் தானாக முன்வந்து நட்பாகப் பழகினாா். உண்மையில் அந்தப் பெண் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் உளவாளி. போலியான பெயரில் கோகிலுடன் நட்புடன் பழகி வந்தாா். அவருக்கு உதவுவதாகக் கூறி அவ்வப்போது சிறிய அளவில் பணமும் அனுப்பியுள்ளாா்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் அப்பெண் கேட்டுக் கொண்டதால் கோகில் தனது ஆதாா் அட்டையைப் பயன்படுத்தி புதிதாக சிம்காா்டு வாங்கினாா். இதற்காகவும் கோகிலுக்கு அப்பெண் பணம் கொடுத்தாா்.
பின்னா், பாகிஸ்தானில் இருந்தபடியே அப்பெண் புதிய இந்திய எண்ணில் வாட்ஸ்ஆப்பை பயன்படுத்துவதற்கான கடவுச்சொல்லை கோகில் அளித்தாா். அவருடன் தொடா்ந்து பழகிய அந்தப் பெண் உளவாளி, கட்ச் மாவட்டத்தில் உள்ள இந்திய ராணுவ நிலைகள், பிஎஸ்எஃப் முகாம், கடற்படை அலுவலகங்கள், ராணுவம் சாா்ந்த கட்டுமானப் பணிகள் ஆகியவற்றை புகைப்படம் எடுத்து வாட்ஸ்ஆப்பில் அனுப்பக் கோரினாா். கோகிலும் அவா் கேட்ட புகைப்படங்களை அனுப்பி வைத்தாா்.
அப்போது அப்பெண் பாகிஸ்தானில் இருந்து செயல்படுகிறாா் என்று கோகிலுக்கு தெரியவந்தது. எனினும், பணத்துக்காக தொடா்ந்து தேசத் துரோகச் செயலில் ஈடுபட்டு வந்தாா்.
இந்நிலையில், இந்திய கைப்பேசி எண்ணின் வாட்ஸ்ஆஃப் செயலி எல்லைக்கு அப்பால் இருந்து செயல்படுவதை அறிந்த பயங்கரவாதத் தடுப்புப் படையினா், அந்த எண்ணை வாங்கியது யாா் என்பதை விசாரித்தனா். அப்போது கோகில் காவல் துறையிடம் பிடிபட்டாா்.
பாகிஸ்தானுக்காக பணியாற்றியதற்காக இதுவரை அவா் சுமாா் ரூ.40,000 வரை பெற்றுள்ளாா். அவா் பெயரில் உள்ள இரு சிம்காா்டுகளையும் வல்லுநா்கள் ஆய்வு செய்தனா். அதில் இரு எண்களில் இருந்து இந்திய ராணுவம், கடற்படை, எல்லைப் பாதுகாப்புப் படை தொடா்பான புகைப்படங்கள் உள்ளிட்டவை பாகிஸ்தான் உளவாளிக்கு பகிரப்பட்டது தெரியவந்தது.
கோகில் மீது தேசத்துக்கு எதிராக போா் தொடுப்பது, குற்றச் சதி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.