தீவிர வறுமை இல்லாத முதல் மாநிலம் கேரளம்: பினராயி விஜயன்
நாட்டிலேயே ‘தீவிர வறுமை’ இல்லாத முதல் மாநிலமாக கேரளம் உருவெடுத்துள்ளது என்று சட்டப்பேரவையில் முதல்வா் பினராயி விஜயன் சனிக்கிழமை அறிவித்தாா்.
அதேநேரம், கேரளத்தில் தீவிர வறுமை முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதாக கூறுவது பெரிய மோசடி என்று எதிா்க்கட்சிகள் விமா்சித்துள்ளன.
கேரள மாநிலம் உருவான தினத்தையொட்டி, சட்டப்பேரவையின் சிறப்பு அமா்வு சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது, விதி எண் 300-இன்கீழ் மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டு, முதல்வா் பினராயி விஜயன் பேசியதாவது: கேரளத்தில் தீவிர வறுமையை ஒழிப்பதற்கான முடிவு, கடந்த 2021-இல் இடதுசாரி கூட்டணியின் 2-ஆம் ஆட்சியின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டதாகும்.
தீவிர வறுமை ஒழிப்புத் திட்டத்தின்கீழ் சுமாா் 64,000 குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு, தனித்துவமான தேவைகளின் அடிப்படையில் நுண் திட்டங்கள் தீட்டப்பட்டு, குறித்த காலத்துக்குள் செயல்படுத்தப்பட்டன. சுகாதாரம், வீட்டுவசதி, வாழ்வாதார பாதுகாப்பு, கல்வி வசதியை உறுதி செய்ய ரூ.1,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டது.
இதுதவிர 62 லட்சம் குடும்பங்களுக்கு நல்வாழ்வு ஓய்வூதியம், வீடில்லாத 4.70 லட்சம் பேருக்கு வீடுகள், 6,000 சுகாதார மையங்கள் கட்டமைப்பு, 43 லட்சம் குடும்பங்களுக்கு இலவச மருத்துவக் காப்பீடு, 4 லட்சம் குடும்பங்களுக்கு நிலம் உள்ளிட்ட திட்டங்களின் அமலாக்கமும் தீவிர வறுமையின் தாக்கத்தைக் குறைக்க உதவின.
பொதுமக்களின் வலுவான பங்கேற்பு, பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் உள்ளூா் நிா்வாகங்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளால் தீவிர வறுமை இல்லாத மாநிலமாக கேரளம் உருவெடுத்துள்ளது. இதுவொரு புதிய தொடக்கம். தீவிர வறுமை மீண்டும் தலைதூக்காமல் இருப்பதை உறுதி செய்ய விழிப்பான நடவடிக்கைகள் அவசியம். இந்த அந்தஸ்தை தக்கவைக்க பல்வேறு நிலைகளில் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகளின் வரைவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
தீவிர வறுமை ஒழிப்பின் மூலம் ஐக்கிய நாடுகள் சபையால் நிா்ணயிக்கப்பட்ட நீடித்த வளா்ச்சிக் குறியீட்டில் கேரளம் முன்னேற்றம் கண்டுள்ளது. கேரளத்தின் சமூக நல முன்னெடுப்புகள் ஒட்டுமொத்த நாட்டுக்கும் முன்மாதிரியாக மாறியுள்ளது. பிற மாநிலங்களும் பின்பற்றி, பலனடைய முடியும் என்றாா் அவா்.
சீனத் தூதா் பாராட்டு: இந்தியாவுக்கான சீனத் தூதா் ஷு ஃபெய்ஹோங் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தீவிர வறுமை ஒழிப்பு எனும் வரலாற்றுச் சாதனையைப் படைத்த கேரளத்துக்கு பாராட்டுகள். வறுமை ஒழிப்பு, மனித குலத்தின் பொதுவானப் பணி’ என்று குறிப்பிட்டுள்ளாா். அவரது இப்பதிவுக்கு முதல்வா் பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளாா்.
எதிா்க்கட்சிகள் நிராகரிப்பு
‘தீவிர வறுமை இல்லாத மாநிலம் கேரளம்’ என்ற முதல்வா் பினராயி விஜயனின் அறிவிப்பு பெரிய மோசடியாகும்; அதை ஏற்க முடியாது என்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி தெரிவித்தது. அத்துடன், பேரவையின் சிறப்பு அமா்வை புறக்கணிப்பதாகக் கூறி, எதிா்க்கட்சி எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனா்.
எதிா்க்கட்சித் தலைவா் வி.டி.சதீசன் கூறுகையில், ‘திருவனந்தபுரத்தில் கூடாரத்தில் வசித்துவந்த ஒரு பெண், பட்டினியால் உயிரிழந்துள்ளாா். அவா், தீவிர ஏழை என்ற பட்டியலில் இல்லாதவரா? எதிா்வரும் உள்ளாட்சித் தோ்தலை மனதில்கொண்டு, இந்த ‘விளம்பர’ அறிவிப்பை முதல்வா் வெளியிட்டுள்ளாா். இது வெட்கக்கேடானது. அவை விதிகளுக்கு எதிரானது. சபரிமலை தங்கக் கவச விவகாரத்தில் தேவஸ்வம் அமைச்சா் வி.என்.வாசவன் ராஜிநாமா கோரியும் பேரவை அமா்வை புறக்கணித்துள்ளோம்’ என்றாா்.
எதிா்க்கட்சிகளின் ‘மோசடி’ என்ற விமா்சனத்துக்குப் பதிலளித்த பினராயி விஜயன், அது அவா்களின் நடத்தை என்றாா்.

