

ராணுவம் உள்பட பல முக்கிய நிறுவனங்களில் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 10% பேர் மட்டுமே ஆதிக்கம் செலுத்துவதாக காங்கிரஸ் மக்களவைத் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ராகுல் காந்தி இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.
ஒளரங்கபாத்தில் பிரசாரத்தின்போது பேசிய அவர், நாட்டின் மக்கள் தொகையில் உயர் சாதியினர் 10 சதவீதத்தினர் மட்டுமே பெருநிறுவனத் துறைகள், அதிகாரத்துவம் மற்றும் நீதித் துறையில் வாய்ப்புகளைப் பெறுகிறார்கள் என்றும் ராணுவம் கூட அவர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எஞ்சிய 90% மக்களில் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தோர், பழங்குடியினத்தவர்கள் மற்றும் இதர சிறுபான்மையினர் உள்ளதாகவும், மிகப்பெரிய பதவிகளில் இப்பிரிவைச் சேர்ந்தவர்கள் யாரும் அதிகாரம் பெறவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தும் விதமாகப் பேசிய ராகுல் காந்தி, நாட்டில் எத்தனை தலித்துகள், ஓபிசி பிரிவினர், பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் இருக்கிறார்கள் என்பதை அறிய வேண்டும் என்றும், நாட்டில் உள்ள 90% மக்களுக்கு களத்தில் பங்கேற்க வாய்ப்புகள் மறுக்கப்படுகிறதென்றால், அரசியலமைப்பை பாதுகாக்க இயலாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பேசிய அவர், நாட்டின் முதன்மையான 500 நிறுவனங்களில், பட்டியலினத்தைச் சேர்ந்த யாரும் இல்லை என்பது வாய்ப்புகளைப் பெறுவதில் உள்ள சமத்துவமின்மையைக் காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவம் குறித்து ராகுல் காந்தி பேசி சர்ச்சையானது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்பு நடைபெற்ற இந்திய ஒற்றுமைப் பயணத்தின்போது அருணாச்சலப் பிரதேச எல்லை வழியாக சீன ராணுவத்தினர் இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்துவதாகப் பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 5 பேர் பலி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.