

ஆபரேஷன் சிந்தூர் நடந்து 6 மாதங்களுக்குப் பிறகு ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் தாக்குதல் நடத்த பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக புலனாய்வு அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியது. இதில் 3 பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த 9 முகாம்கள் அழிக்கப்பட்டன.
இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் நடந்து 6 மாதங்களான நிலையில், ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் தாக்குதல் நடத்த லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக உளவு அமைப்புகள் தகவல் தெரிவிக்கின்றன.
செப்டம்பர் மாதம் முதலே ஜம்மு - காஷ்மீருக்குள் உளவு பார்ப்பதற்காக பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஊடுருவியுள்ளதாகவும், பாகிஸ்தானின் சிறப்பு சேவைக் குழு மற்றும் ஐஎஸ்ஐ அமைப்புகள் மூலம் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு வழியாக ஆயுதங்களையும் கொண்டு சேர்த்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதியான ஷாம்ஷெர் தலைமையிலான குழு, ட்ரோன்களைப் பயன்படுத்தி உளவு பார்த்ததாகவும், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் ஊடுருவல் நடத்த சந்தேகத்திற்கிடமான இடைவெளிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் உளவு வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
இதையும் படிக்க | அரசியல் அனுபவமில்லை, இருந்தாலும்... பிகாரின் இளம் வயது வேட்பாளரின் வாக்குறுதிகள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.