

தேர்தல் ஆணையத்தின் உதவியோடு மத்திய அரசு வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் இதுவரை குற்றம்சாட்டி வந்த நிலையில், ஹரியாணாவில் 25 லட்சம் வாக்காளர்களை நீக்கி, ஆட்சித் திருட்டு நடந்துள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருக்கிறார்.
பிகாரில் அவசர அவசரமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்று நாளை முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில், புது தில்லியில் இன்று மத்திய அரசின் வாக்குத் திருட்டு குறித்து ஆவணங்களுடன் வெளிப்படுத்தி வருகிறார் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
செய்தியாளர்கள் முன்னிலையில், ஹரியாணா மாநிலத்தில் நடைபெற்ற வாக்குத் திருட்டு தொடர்பாக விவரித்த ராகுல் காந்தி, ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்குகளை உருவாக்கி மத்திய அரசு ஆட்சித் திருட்டை நடத்தியிருப்பதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார்.
மேலும், பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் பெண் ஒருவரின் புகைப்படத்தைப் பயன்படுத்தி பல போலி வாக்காளர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். அதாவது, ஒரு புகைப்படத்தை வைத்து ஒரு தொகுதியில் 100 வாக்குகள் திருடப்பட்டுள்ளன. ஒரே நபர், ஒரே நாளில் பல வாக்குகளை அளிக்க தேர்தல் ஆணையம் எப்படி அனுமதித்தது? ஹரியாணாவில் தபால் வாக்குகளின் எண்ணிக்கைக்கும், எண்ணப்பட்ட தபால் வாக்குகளின் எண்ணிக்கைக்கும் பொருத்தமேயில்லை.
ஒரு முழு மாநிலத்தின் வாக்குகளும் எவ்வாறு திருடப்பட்டன என்பதை சொல்லப் போகிறேன் என்று ராகுல் பல விவரங்களை வெளிப்படுத்தியிருக்கிறார். ஒரே ஒரு புகைப்படத்தை வைத்து 223 வாக்காளர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். அதன்படி பார்த்தால், ஹரியாணாவில் எட்டு வாக்காளர்களில் ஒன்று போலியானது. மத்திய அரசால் உருவாக்கப்பட்டதாக உள்ளது.
இதன் மூலம் ஜென் ஸி எனப்படும் இளம் வாக்காளர்களின் எதர்காலம் அழிக்கப்படுகிறது. ஹரியாணா மாநிலத்தில் இவ்வாறு ஆட்சித் திருட்டு நடைபெற்றதாக ராகுல் காந்தி பரபரப்புக் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
நான் கூறும் குற்றச்சாட்டுக்கு 100 சதவீத ஆதாரங்கள் உள்ளன. 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளன. 2 கோடி வாக்காளர்களில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.