நெல்லை அருகே 800 ஆண்டுகள் பழமையான பாண்டியர் கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு!

மனோன்மணியம் பல்கலைக்கழக மாணவர்கள் பழையான கல்வெட்டுகள் கண்டுபிடித்தது பற்றி..
கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு
கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு
Published on
Updated on
2 min read

நெல்லை அருகே ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தடுப்பணை ஒன்றில் 800 ஆண்டுகள் பழமையான பாண்டிய மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்களை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்கள் கண்டறிந்துள்ளனர்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொல்லியல் துறைத் தலைவர் (பொ) பேராசிரியர் சுதாகர், உதவிப் பேராசிரியர்கள் மதிவாணன், முருகன் மற்றும் சந்தியா ஆகியோர், தங்கள் துறை மாணவ, மாணவிகளை கள ஆய்வுப் பயிற்சிக்காக நெல்லை, சுத்தமல்லி அருகே உள்ள பழவூர் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். நெல்லைக்கு மேற்கே சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த பழவூர் கிராமத்தில், தாமிரபரணி ஆற்றங்கரையில் பழைமையான பூதேவி, ஸ்ரீதேவி, ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலும், தழுவக் கொழுந்தீசுவரர் என்ற சிவன் கோயிலும், திருமேனி அழகர் சாஸ்தா கோயிலும் அமைந்துள்ளன. இந்தக் கோயில்களுக்கு அருகே தாமிரபரணி ஆற்றின் குறுக்கே ஒரு தடுப்பணை அமைந்துள்ளது. கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தத் தடுப்பணையைக் கண்டு வியந்த மாணவ, மாணவிகள், அங்குள்ள கற்தூண்களை ஆய்வு செய்தனர்.

அப்போது, அந்தத் தடுப்பணையில் சுமார் 30க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். உடனடியாக அந்தக் கல்வெட்டுகளைக் கழுவி சுத்தம் செய்து, தொல்லியல் முறைப்படி படியெடுத்தனர். அதில் உள்ள எழுத்துக்களை மாணவ, மாணவிகள் படித்து அதன் பழமையைக் கணக்கிட்டனர். இதில், அந்தக் கல்வெட்டுகளில், 800 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்ட சுந்தரபாண்டியன், 700 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்ட குலசேகர பாண்டியன் மற்றும் 600 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்ட உத்தம பாண்டியன் ஆகிய பாண்டிய மன்னர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தது தெரியவந்தது.

மேலும், பழவூர், திருநெல்வேலி போன்ற ஊர்ப் பெயர்களும் இந்தக் கல்வெட்டுகளில் காணப்பட்டன. இந்தக் கல்வெட்டுகள் பெரும்பாலும் பிராமணர்களுக்கு நிலத்தானம் கொடுத்த தகவல்களையும், அந்த நிலங்களின் எல்லை திசைகளையும் குறிப்பிடுவதாக இருந்தன. ஆய்வின் மிக முக்கிய கண்டுபிடிப்பாக, “லார்ட் துரை” என்ற பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றும் மாணவர்களுக்குக் கிடைத்தது. இதன் மூலம், இந்தத் தடுப்பணை சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது என தொல்லியல் பேராசிரியர்கள் உறுதிப்படத் தெரிவித்தனர்.

அருகில் இடிந்து கிடந்த பழைமையான கோயில்கள் மற்றும் மண்டபங்களிலிருந்து கற்தூண்களை எடுத்து வந்து, ஆங்கிலேயர்கள் இந்தத் தடுப்பணையைக் கட்டியுள்ளனர். இதனாலேயே, 800 ஆண்டுகள் பழமையான பாண்டியர் கால கல்வெட்டுகள், 200 ஆண்டுகள் பழமையான ஆங்கிலேயர் காலத் தடுப்பணையில் இடம்பெற்றுள்ளன என்ற வரலாற்று உண்மையை மாணவர்கள் கண்டறிந்தனர். பழவூர் தடுப்பணையைப் போலவே, நெல்லைக்கு அருகே மேலும் இரண்டு தடுப்பணைகள் இதே பாணியில், இடிந்த கோயில் தூண்களைக் கொண்டு அழகாகவும் வலுவாகவும் கட்டப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதில், நெல்லைக்கு மேற்கே 10 கிலோ மீட்டர் தொலைவில் தருவை என்ற ஊரில், பச்சை ஆற்றுக்குக் குறுக்கே உள்ள தடுப்பணை, நெல்லைக்குக் கிழக்கே 10 கிலோமீட்டர் தொலைவில், தாமிரபரணி ஆற்றுக்குக் குறுக்கே உள்ள தடுப்பணை ஆகியவை கல்வெட்டுகளுடன் தொல்லியல் மாணவர்கள் ஏற்கனவே கண்டறிந்தனர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தகவல்களைக் கண்டறிந்த தொல்லியல் துறை பேராசிரியர்களையும், மாணவ, மாணவிகளையும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சந்திரசேகர் பாராட்டினார்.

தொல்லியல் மாணவர்களின் ஆர்வம்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொல்லியல் துறை பேராசிரியர்கள் கூறுகையில், ‘தொல்லியல் மாணவ- மாணவிகள் மிகுந்த ஆர்வத்தோடு கள ஆய்வுகளைச் செய்து வருகின்றனர். இதனால் பல வரலாற்று உண்மைகளை அவர்கள் பதிவு செய்து வருகின்றனர். அவர்களின் இந்த செயலால் இன்னும் பலருக்கு தொல்லியல் துறை மீதான ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் தொல்லியல் ரீதியாக அவர்கள் ஆழ்ந்த ஞானம் பெற்று தென் தமிழ்நாட்டின் பல உண்மைகளை வெளிப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.’ என்றனர்.

Summary

Students from the Department of Archaeology at Manonmaniam Sundaranar University have discovered 800-year-old inscriptions from the Pandya dynasty in a dam.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com