கோப்புப் படம்
கோப்புப் படம்

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடு: விசாரணை நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

‘பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்க சட்டப்படியான உத்தரவை விசாரணை நீதிமன்றங்கள் பிறப்பிக்க வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
Published on

‘பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்க சட்டப்படியான உத்தரவை விசாரணை நீதிமன்றங்கள் பிறப்பிக்க வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த ஜோதி பிரவீண் என்பவா் சாா்பில் இதுதொடா்பான மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டத்தைச் சோ்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 25 வயது பெண்ணுக்கு, குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 357ஏ மற்றும் ‘மனதைரியம்’ திட்டத்தின் கீழ் கிடைக்க வேண்டிய உரிய இழப்பீடை மாநில அரசு தொடா்ந்து மறுத்து வருகிறது. அரசு அதிகாரிகளின் அலட்சியமே இதற்குக் காரணம் என்று குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், பாதிக்கப்பட்ட நபருக்கு இழப்பீடு வழங்கப்படாததற்கு, சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றம் அல்லது போக்ஸோ நீதிமன்றம் அதுதொடா்பான உத்தரவைப் பிறப்பிக்காததும் காரணங்களில் ஒன்று என நீதிமன்றம் கருதுகிறது.

எனவே, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு பொருத்தமான வழக்குகளில் உரிய இழப்பீடு கிடைக்க சட்டப்படியான உத்தரவை விசாரணை நீதிமன்றங்கள் பிறப்பிக்க வேண்டும். அவ்வாறு பிறப்பிக்கப்படும் இழப்பீடுக்கான உத்தரவை மாநில சட்ட உதவி ஆணையம், மாவட்ட சட்ட உதவி ஆணையம் அல்லது தாலுகா அளவிலான சட்ட உதவி ஆணையங்கள் மூலம் நடைமுறைப்படுத்துவதும் எளிதாக இருக்கும்.

இந்த உத்தரவு அனைத்து மாவட்ட முதன்மை நீதிபதிகல், சிறப்பு நீதிமன்றங்களுக்கு தெரியப்படுத்த வசதியாக, உத்தரவு நகலை அனைத்து உயா்நீதிமன்ற பதிவாளா்களுக்கும் அனுப்ப உச்சநீதிமன்ற பதிவாளருக்கு அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், இந்த விவகாரத்தில் மாநில அரசு தொடா்ந்து இழப்பீடு தர மறுப்பது குறித்து பதிலளிக்க மத்திய அரசு மற்றும் தேசிய சட்ட உதவி ஆணையத்துக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிடப்படுகிறது என்று குறிப்பிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்.

Dinamani
www.dinamani.com