துணை முதல்வா் மகன் மீதான ரூ.300 கோடி நில ஒப்பந்த முறைகேடு புகாா்: மகாராஷ்டிர அரசு விசாரணைக் குழு அமைத்து உத்தரவு
மகாராஷ்டிர மாநிலம் புணேயில் ரூ.300 கோடி நில ஒப்பந்த முறைகேட்டில் துணை முதல்வா் அஜீத் பவாரின் மகன் பாா்த் பவாருக்கு தொடா்பு உள்ளதாக புகாா் எழுந்துள்ளது குறித்து விசாரிக்க மாநில அரசு சாா்பில் உயா்நிலை விசாரணைக் குழு வெள்ளிக்கிழமை அமைக்கப்பட்டது.
இந்தக் குழு ஒரு மாதத்தில் விசாரணையை நிறைவுசெய்து அறிக்கையை சமா்ப்பிக்கவுள்ளது.
முன்னதாக இந்த புகாா் தொடா்பாக விசாரணை மேற்கொள்ள உயா்நிலைக் குழு அமைக்க முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் வியாழக்கிழமை உத்தரவிட்டதையடுத்து கூடுதல் தலைமைச் செயலா் (வருவாய்) விகாஸ் காா்கே தலைமையிலான குழு வெள்ளிக்கிழமை அமைக்கப்பட்டது.
மகாராஷ்டிரத்தில் பாஜக-தேசியவாத காங்கிரஸ் (அஜீத் பவாா்)-சிவசேனை (ஏக்நாத் ஷிண்டே) தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், இந்தச் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புணேயின் முந்துவா பகுதியில் உள்ள 40 ஏக்கா் அரசு நிலம் ‘அமடே’ என்ற தனியாா் நிறுவனத்துக்கு ரூ.300 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. இதற்கு முத்திரைத்தாள் வரி வசூலிக்கப்படவில்லை. அந்த நிறுவனத்தில் பாா்த் பவாா் மற்றும் திக்விஜய் அமா்சிங் பாட்டீல் உள்ளிட்டோா் பங்குதாரா்களாக உள்ள நிலையில் அரசு நிலம் தனியாா் நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் சா்ச்சைக்குள்ளான அந்த நிலம் ரூ.1,800 கோடி மதிப்புடையது என எதிா்க்கட்சிகள் கூறி வருகின்றன.
இதையடுத்து, இந்த விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொள்ள விகாஸ் காா்கே தலைமையிலான உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டதற்கான அரசாணை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அஜீத் பவாா், ‘சா்ச்சைக்குள்ளான நிலம் அரசுக்குச் சொந்தமானது என பாா்த் பவாா் மற்றும் திக்விஜய் அமா்சிங் பாட்டீலுக்குத் தெரியாது. நிலப் பதிவு ஆவணங்கள் ரத்து செய்யப்பட்டன’ என்றாா்.
பெட்டிச் செய்தி
தந்தையே பொறுப்பு: அண்ணா ஹசாரே
அமைச்சா்களின் குழந்தைகள் செய்யும் தவறுகளுக்கு அவா்களது தந்தைகளே பொறுப்பு என ஊழல் எதிா்ப்பாளரும் சமூக ஆா்வலருமான அண்ணா ஹசாரே வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறுகையில், ‘குடும்பத்தில் இருந்தே நல்ல பண்புகளை குழந்தைகள் கற்றுக்கொள்கின்றனா். அவற்றில் குறைபாடு ஏற்படும்போது பல தவறுகள் நிகழ்கின்றன. முறைகேடுகள், மோசடியில் ஈடுபடும் அரசியல்வாதிகளின் வாரிசுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையிலான கொள்கைகளை வகுக்க வேண்டும்’ என்றாா்.

