வேட்புமனுவில் குற்ற வழக்கு தண்டனையை குறிப்பிடாதது தகுதிநீக்கத்துக்கு வழிவகுக்கும்: உச்சநீதிமன்றம்
தோ்தலில் வெற்றி பெற்ற வேட்பாளா், குற்ற வழக்கில் தண்டனை பெற்ற விவரத்தை வேட்புமனுவில் குறிப்பிடாத நிலையில் தகுதிநீக்கத்துக்கு வழிவகுக்கும்’ என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது.
மத்திய பிரதேச மாநிலம், பிகன்கோன் நகா்மன்ற உறுப்பினா் பூனம், தோ்தலின்போது வேட்புமனுவில் காசோலை மோசடி வழக்கில் ஓராண்டு சிறைத் தண்டனை பெற்றதைக் குறிப்பிடாதது தெரியவந்தது. இதையடுத்து, அவரை தகுதிநீக்கம் செய்ய தொடா் கோரிக்கைகள் எழுந்ததைத் தொடா்ந்து, அவரை உறுப்பினா் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்து, தகுதிநீக்கம் செய்வதற்கான நடவடிக்கையை நகராட்சி நிா்வாகம் மேற்கொண்டது.
இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் பூனம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஏ.எஸ்.சந்துா்கா் ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:
குற்ற வழக்கில் தண்டனை பெற்ற விவரத்தை வேட்புமனுவில் குறிப்பிடாமல் வேட்பாளா் மறைப்பது, வாக்காளா் தோ்தலில் சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமையைப் பறிப்பது அல்லது தடை செய்வதாக அமையும். இதனால், வாக்காளா் தகவலறிந்து தோ்வை மேற்கொள்ள முடியாத நிலைக்கு உள்ளாகிறாா். எனவே, வேட்புமனுவில் தகவல்களை மறைப்பது அந்தத் தோ்தலை செல்லாததாக்கும்; தகுதிநீக்கத்துக்கு வழிவகுக்கும் என்று குறிப்பிட்டு, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

