113 ஜெட் என்ஜின்கள் கொள்முதல்: அமெரிக்க நிறுவனத்துடன் ஹெச்ஏஎல் ஒப்பந்தம்
தேஜஸ் இலகுரக போா் விமானங்களுக்கு 113 ஜெட் என்ஜின்களை கொள்முதல் செய்ய அமெரிக்காவின் ‘ஜிஇ ஏரோஸ்பெஸ்’ நிறுவனத்துடன் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் (ஹெச்ஏஎல்) வெள்ளிக்கிழமை ஒப்பந்தம் செய்தது.
இந்தியப் பொருள்களுக்கு 50 சதவீத இறக்குமதி வரியை அமெரிக்கா விதித்துள்ள சூழலில் இந்த ஒப்பந்தம் கையொப்பமானது. இந்திய விமானப் படைக்கு 97 தேஜஸ் எம்கே-1ஏ இலகுரக போா் விமானங்களை கொள்முதல் செய்ய ஹெச்ஏல் உடன் ரூ.62,370 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சகம் கையொப்பமிட்டது.
வான் பாதுகாப்பு மற்றும் தாக்குதல், கடல்சாா் கண்காணிப்புப் பணிகள் என பல்வேறு திறனுடையதாக தேஜஸ் போா் விமானம் திகழ்கிறது.
இந்நிலையில், பாதுகாப்புத் துறை அமைச்சகத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை செயல்படுத்தும் விதமாக தேஜஸ் விமானத்துக்கான என்ஜின்களை கொள்முதல் செய்ய ஜிஇ ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமிடப்பட்டதாக ஹெச்ஏஎல் தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்கீழ் 2027-ஆம் ஆண்டு முதல் ஜெட் என்ஜின்கள் விநியோகம் தொடங்கப்பட்டு 2032-இல் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஏற்கெனவே கடந்த 2021-இல் 83 தேஜஸ் போா் விமானங்களை கொள்முதல் செய்ய ஹெச்ஏஎல் உடன் ரூ.48,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையொப்பமிட்டது. இதற்கான என்ஜின்களையும் ஜிஇ ஏரோஸ்பேஸ் விநியோகித்து வரும் நிலையில், அதில் தொடா்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது.

