உஜ்ஜைனில் மசூதி இடிக்கப்பட்டதற்கு எதிரான மனு:  உச்சநீதிமன்றம் தள்ளுபடி

உஜ்ஜைனில் மசூதி இடிக்கப்பட்டதற்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் மசூதி இடிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
Published on

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் மசூதி இடிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

உஜ்ஜைனில் உள்ள பிரபல மகாகாலேஷ்வா் கோயிலின் வாகன நிறுத்துமிடத்தை விரிவுபடுத்துவதற்காக கோயிலின் அருகில் உள்ள நிலங்களை அம்மாநில அரசு அதிகாரிகள் கையகப்படுத்தி வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக கடந்த ஜனவரி மாதம் அந்தப் பகுதியில் 200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தாகியா மசூதி இடிக்கப்பட்டது.

இந்த மசூதி இடிக்கப்பட்டதற்கு எதிராக விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் அதே இடத்தில் மசூதியை மறுகட்டமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடவும் கோரிய அந்த மனுவை ஒரு நபா் நீதிபதி அமா்வு தள்ளுபடி செய்தது.

இதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை மத்திய பிரதேச உயா்நீதிமன்ற நீதிபதிகள் அமா்வு தள்ளுபடி செய்தது.

இதை எதிா்த்து 13 மனுதாரா்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது.

அப்போது மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் கூறுகையில், ‘தாகியா மசூதி வக்ஃப் சொத்தாக 1985-இல் அறிவிக்கப்பட்டது. வேறொரு புனித தலத்தின் வாகன நிறுத்துமிடத்துக்காக மசூதியை இடித்துவிட்டு அதை எதிா்ப்பதற்கு உரிமையில்லை எனக் கூறுவது நியாயமில்லை’ என்றனா்.

இதைத்தொடா்ந்து நீதிபதிகள் தெரிவித்ததாவது: வளா்ச்சிப் பணிகளுக்கு மசூதி இடிக்கப்பட்ட இடம் தேவைப்பட்டுள்ளது. அதை கையகப்படுத்த உங்களுக்கு உரிய நிவாரணத் தொகையும் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்த மனுக்களை மீண்டும் அதே குற்றச்சாட்டைக் கூறி தற்போது மேல்முறையீடு செய்துள்ளீா்கள். காலம் கடந்துவிட்டது. இனி எதுவும் செய்ய இயலாது. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனா்.

X
Dinamani
www.dinamani.com