

தில்லி தேசிய உயிரியல் பூங்கா பார்வையாளர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினார்.
பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கடந்த ஆகஸ்ட் 30 முதல் தில்லி விலங்கியல் பூங்கா மூடப்பட்டிருந்தது. தகுதி வாய்ந்த அதிகாரிகளிடமிருந்து ஒப்புதல் பெற்ற பிறகு, நவம்பர் 8 (இன்று) முதல் பார்வையாளர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
தேசிய விலங்கிய பூங்கா வெளியிட்ட அறிக்கையில்,
கடுமையான உயிரியல் பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடரும். மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட பறவைக் காய்ச்சலுக்கான தயார்நிலை, கட்டுப்பாடு மற்றும் கட்டுப்படுத்தலுக்கான செயல் திட்டத்தின் கீழ் அதிகாரிகள் சுத்தம் செய்தல், கண்காணிப்பு மற்றும் பல சுற்றுச் சோதனைகளை மேற்கொண்டனர்.
பறவைக் காய்ச்சலுக்குப் பிறகு சேகரிக்கப்பட்ட மாதிரிகள் போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில் எதிர்மறையாக இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், உயிரியல் பூங்கா மீண்டும் திறக்கப்படுகிறது.
2016 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் இதேபோன்று பறவைக் காய்ச்சல் ஏற்பட்டு மூடப்பட்டது. சமீபத்திய ஆண்டுகளில் பறவைக் காய்ச்சலால் தில்லி உயிரியல் பூங்கா மூன்றாவது முறையாக மூடப்பட்டுள்ளது.
1959 இல் நிறுவப்பட்ட இந்த தில்லி உயிரியல் பூங்கா தலைநகரின் மையத்தில் 176 ஏக்கர் பரப்பளவில் 96 வகையான விலங்குகள், பறவைகள் மற்றும் ஊர்வன உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறும் இந்தியா: பிரதமர் மோடி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.