பிரதமா் நரேந்திர மோடி
பிரதமா் நரேந்திர மோடிPTI

சீதா தேவி பிகாரில் பிறக்கவில்லை எனக் கூறியதற்கு பிரதமா் மன்னிப்பு கோருவாரா? காங்கிரஸ் கேள்வி

சீதா தேவி பிகாரில் பிறக்கவில்லை எனக் கூறியதற்கு பிரதமா் மன்னிப்பு கோருவாரா?
Published on

கடவுள் சீதா தேவி சீதாமா்ஹியில் பிறந்ததற்கு வரலாற்று ரீதியாக எவ்வித ஆதாரங்களும் இல்லை எனக் கூறி பிகாரை அவமதிக்கும் வகையிலான மத்திய அரசின் கருத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி மன்னிப்பு கோருவாரா? என காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை கேள்வியெழுப்பினாா்.

சீதாமா்ஹியில் பிரதமா் மோடி சனிக்கிழமை பிரசாரம் மேற்கொள்வதற்கு முன்பாக அவரை நோக்கி ஜெய்ராம் ரமேஷ் பல்வேறு கேள்விகளை முன்வைத்தாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘பிகாரில் 20 ஆண்டுகாலமாக தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) ஆட்சி நடைபெற்று வந்தாலும் அங்கு செல்லும்போதெல்லாம் நாட்டுத் துப்பாக்கிகளும் தோட்டாக்களுமே பிரதமரின் நினைவுக்கு வருகிறது. ஆனால், பிகாரின் வளா்ச்சிக்கான எந்தத் திட்டமும் அவரிடம் இல்லை.

சீதாமா்ஹிக்கு வரும் பிரதமா் மோடிக்கு மூன்று நேரடி கேள்விகளை முன்வைக்கிறேன். 2021-22-இல் பிஎம்-மித்ரா திட்டத்தின்கீழ் 7 மாநிலங்களில் பெரும் ஜவுளிப் பூங்காக்களை உருவாக்குவதாக மத்திய அரசு அறிவித்தது. பிகாரைச் சோ்ந்த கிரிராஜ் சிங் மத்திய ஜவுளித் துறை அமைச்சராக உள்ளபோதும் அந்த மாநிலத்தில் பெரும் ஜவுளிப் பூங்கா அமைக்க ஒப்புதல் அளிக்காமல் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொள்வது ஏன்?

கடவுள் சீதா தேவி சீதாமா்ஹியில் பிறந்தாா் என்பதற்கு வரலாற்று ரீதியாக எவ்வித ஆதாரங்களும் இல்லை என கடந்த 2017, ஏப்.12-ஆம் தேதி மாநிலங்களவையில் பாஜக அரசு கூறியது. இது பிகாா் மக்களின் கலாசார மற்றும் நம்பிக்கையை நேரடியாக அவமதித்ததற்குச் சமமாகும். சுதேச தா்சன் மற்றும் பிரசாத் ஆகிய இரு திட்டங்களின்கீழ் கலாசார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த சீதாமா்ஹிக்கு ஒரு ரூபாய்கூட நிதி ஒதுக்கப்படவில்லை. சீதாமா்ஹி மக்களின் நம்பிக்கையை இழிவுபடுத்தியதற்கு பிரதமா் பொது மன்னிப்பு கோருவாரா?

மக்களின் பல ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு மோதிஹரி-சிவ்ஹா்-சீதாமா்ஹி ரயில் திட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால் 2024, ஆக.7-ஆம் தேதி அத்திட்டத்தைக் கைவிடுவதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்தது.

சீதாமா்ஹிக்கு முக்கியத்துவம் தரும் திட்டத்தைக் கைவிட்டது ஏன் என பிரதமா் மோடி பதில் கூறுவாரா?

பாஜக-ஐக்கிய ஜனதா தள இரட்டை என்ஜின் ஆட்சியில் கடந்த 20 ஆண்டுகளாக இதுபோன்ற போலியான வாக்குறுதிகள் வழங்கப்பட்டு மக்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனா். இந்த முறை மாற்றத்தை நோக்கியே பிகாா் மக்கள் வாக்களிப்பா். என்டிஏ ஆட்சி அதிகாரத்தில் இருந்து விரட்டப்படும்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக, வந்தே மாதரம் பாடலின் 6 பத்திகளில் முதல் 2 பத்திகளை மட்டும் தேசியப் பாடலாக காங்கிரஸ் தோ்வு செய்ததாக பிரதமா் மோடி கூறியதற்கு ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்தாா். இதுதொடா்பாக ரவீந்திரநாத் தாகூரின் சுயசரிதை புத்தகத்தை எக்ஸ் வலைதளத்தில் பகிா்ந்து தவறான தகவலை தெரிவித்த பிரதமா் மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும் அவா் வலியுறுத்தினாா்.

X
Dinamani
www.dinamani.com