

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் பெங்களூரில் நடைபெற்ற தேவி விருதுகள் விழாவில், 11 பெண் சாதனையாளர்கள், விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் நவ. 8-ஆம் தேதி சனிக்கிழமை தேவி விருதுகள் - 2025 விழா நடைபெற்றது. இவ்விழாவில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மனோஜ் குமார் சொந்தாலியா, ஆசிரியர் குழு இயக்குநர் பிரபு சாவ்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பங்கேற்றுப் பேசிய அக்சிலோர் வெஞ்சர்ஸ் (Axilor Ventures) நிறுவனத்தின் தலைவர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன், “’வளர்ந்த இந்தியா’ என்ற எங்கள் கனவை நனவாக்க வேண்டுமானால், பெண்கள் வேலைக்கு செல்லவும், தலைமை வகிக்கவும், முன்னேற்றம் அடைவதற்கும் ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும்.
இதற்காக, பெண்கள் பயமின்றி, ஏற்றத்தாழ்வின்றி தங்களது திறமையை வெளிப்படுத்தும் பாதுகாப்பான மற்றும் ஊக்கமளிக்கும் பணியிடங்கள் தேவை” என அவர் தெரிவித்தார்.
“தேவி விருது பெற்றோரின் சாதனைகளைக் கொண்டாடும் வேளையில், ஒரு தேசிய சவாலையும் உணர வேண்டும் - இந்தியாவில் பெண்கள் வேலைக்கு செல்வதற்கு அதிக பணியிடங்கள் தேவை,” என்று கோபாலகிருஷ்ணன் கூறினார்.
சீனாவில் பெண்கள் வேலைக்கு செல்வதை, இந்தியாவுடன் ஒப்பிட்ட அவர், “சீனாவில் சுமார் 60% பெண் தொழிலாளர்கள் உள்ளனர். அங்குள்ள பெண்கள் உற்பத்தி, தொழில்நுட்பம், தொழில் முனைவுத்துறைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்களின் பங்களிப்பு சீனாவின் வேகமான பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணம்,” என்றார்.
இதை ஒப்பிடும்போது, ”இந்தியாவில் பெண் தொழிலாளர்கள் பணிப்பங்கேற்பு விகிதம் இன்னும் 30% க்கும் குறைவாக உள்ளது” என்று அவர் வருத்தம் தெரிவித்தார்.
”பெண்கள் பணிப்பங்கேற்பை சிறியளவு உயர்த்தினாலும், அதனால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) அடுத்த பத்து ஆண்டுகளில் டிரில்லியன் டாலர் அளவில் அதிகரிக்கலாம்” என்று அவர் குறிப்பிட்டார்.
விருது பெற்றவர்கள்
பின்வரும் பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள் வழங்கப்பட்டன:
முன்னாள் கிரிக்கெட் வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தி, பேர் நெசசிட்டீஸ் நிறுவனர் சாஹர் மன்சூர், நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஜவுளி கலைஞர் பிரகதி மாத்தூர், எழுத்தாளர் அனிதா நாயர், கல்வியாளர் நூரைன் ஃபாசல், கிராஃப்டிசன் அறக்கட்டளையின் நிறுவனர் மயூரா பாலசுப்பிரமணியன், விளையாட்டுத் துறை பொறுப்பாளர் தீப்தி போபையா, மேலாண்மை நிபுணர் ஹேமா ரவிச்சந்தர், தி ராமேஸ்வரம் கஃபேவின் இணை நிறுவனர் திவ்யா ராகவேந்திர ராவ் , சமூக தொழில்முனைவோர் மற்றும் நெக்டர் ஃப்ரெஷின் நிறுவனர் சாயா நஞ்சப்பா ஆகியோருக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.