

ஹிமாசல பிரதேசத்தில் மதுபோதையில் 2 அரசுப் பேருந்துகளுக்கு தீ வைத்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹிமாசல பிரதேச மாநிலம், பைஜ்நாத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி அருகே நிறுத்தப்பட்டிருந்த ஹிமாசல அரசுப் பேருந்தும் சண்டீகர் அரசுப் பேருந்தும் திடீரென தீப்பிடித்து சில நிமிடங்களில் எரிந்து சாம்பலாயின. அருகிலுள்ள அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஹிமாசல அரசுப் பேருந்து ஓட்டுநர் சுனில் குமார் கூறுகையில், சத்தம் கேட்டு வெளியே வந்தபோது இரண்டு பேருந்துகளும் தீப்பிடித்து எரிந்ததைக் கண்டேன் என்றார்.
அடையாளம் தெரியாத ஒருவர் வேண்டுமென்றே வாகனங்களுக்கு தீ வைத்ததாக சந்தேகித்ததாக போலீஸார் தெரிவித்தனர். இதுகுறித்து பைஜ்நாத் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் இரண்டு அரசுப் பேருந்துகளுக்கு தீ வைத்ததாக இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
பர்வானா தார் கிராமத்தைச் சேர்ந்த சுஷாந்த் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சனிக்கிழமை காவலில் எடுக்கப்பட்டதாக காவல் கண்காணிப்பாளர் அசோக் ரத்தன் தெரிவித்தார். விசாரணையில் குற்றம்சாட்டப்பட்டவர் மதுபோதையில் இந்தச் செயலைச் செய்ததாக ஒப்புக்கொண்டதால் கைது செய்யப்பட்டார் என்று அதிகாரி மேலும் கூறினார்.
இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள நோக்கத்தைக் கண்டறிய விசாரணைகள் நடந்து வருவதாக ரத்தன் தெரிவித்தார். இதனிடையே பேருந்து நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தவும், வாகன நிறுத்துமிடங்களில் வழக்கமான இரவு ரோந்துப் பணியை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு ஹிமாசல மாலிந போக்குவரத்துக் கழக துணைத் தலைவர் அஜய் வர்மா உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.