

தில்லி செங்கோட்டை அருகேவுள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் இன்று (நவ. 10) மாலைதிடீரென வெடித்துச் சிதறியது. இதில் 10 பேர் உயிரிழந்ததாகவும், 24 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கோட்டை அருகே இச்சம்பவம் நடந்துள்ளதால், இதில் பயங்கரவாத சதித்திட்டம் ஏதேனும் உள்ளதா? என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
தில்லி செங்கோட்டை அருகேவுள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் முதலாம் வாயில் அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் இன்று (நவ. 10) மாலை 6.50 மணியளவில் தீப்பிடித்து எரிந்தது. தீப்பிடித்து எரிந்த சிறிது நேரத்தில் கார் வெடித்துச் சிதறியதாகக் கூறப்படுகிறது.
எனினும், மெட்ரோ ரயில் நிலையம் அருகே இருந்த மக்கள், முதலில் கார் வெடித்ததாகவும் பின்னர், தீப்பிடித்து எரிந்ததாகவும் கூறுகின்றனர்.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இச்சம்பவம் நடந்ததால், உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயைக் கட்டுப்படுத்தும் பணிகளில் வீரர்கள் ஈடுபட்டனர். வெடித்துச் சிதறிய கார் அருகே இருந்த மற்ற வாகனங்களும் தீப்பிடித்து எரிந்ததாக தீயணைப்பு வீரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார் யாருக்குச் சொந்தமானது? காரை யார் அங்கு நிறுத்தியது என்பதை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல் துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.
ஜம்மு - காஷ்மீர், ஹரியாணா மாநிலங்களில் காவல் துறையினர் மேற்கொண்ட சோதனையில் 2900 கிலோ வெடிப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில், செங்கோட்டை அருகே கார் வெடித்து விபத்து நேர்ந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளில் ராணுவ முகாம்கள் உள்ள நிலையில், கார் வெடித்துள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.
இதனால், கார் வெடித்த பகுதியில் உள்ள மக்களிடம் காவல் துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது. மேலும் செங்கோட்டையை சுற்றியுள்ள பழைய தில்லி உள்ளிட்டப் பகுதிகளிலும் காவல் துறை விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
10 பேர் பலி 24 பேர் படுகாயம்
தில்லி மெட்ரோ ரயில் நிலையம் அருகே கார் வெடித்துச் சிதறிய விபத்தில் இதுவரை 10 பேர் பலியானதாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் 24 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள எல்.என்.ஜே.பி. மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். கார் வெடித்துச் சிதறிய இடத்தின் அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆட்டோ, கார்கள் உள்ளிட்ட பிற வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன.
காவல் துறை உயரதிகாரிகள் ஆய்வு
விபத்து நடந்த மெட்ரோ ரயில் நிலையத்தின் முதலாம் வாயில் அருகே காவல் துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். சிசிடிவி காட்சிகளைக் கொண்டு முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்ட சிஆர்பிஎஃப் டிஐஜி கிஷோர் பிரசாத், ''தற்போது விபத்து குறித்து எதையும் கூற இயலாது. தற்போது விபத்து நடந்த இடத்தை மட்டுமே பார்வையிட்டுள்ளோம். முதல்கட்ட விசாரணைக்குப் பிறகு தகவல்கள் தெரிவிக்கப்படும்'' எனக் குறிப்பிட்டார்.
அமித் ஷாவுடன் பிரதமர் ஆலோசனை
கார் வெடித்து விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார்.
இதில், மக்கள் அதிகம் இருந்த இடத்தில் நடந்த கார் விபத்தையடுத்து அங்கு நிலவும் சூழல் குறித்து பிரதமர் கேட்டறிந்தார். மேலும், காவல் துறையுடன் தொடர்பில் இருக்குமாறு அமித் ஷாவை வலியுறுத்தியதாகத் தெரிகிறது.
பாதுகாப்பு அதிகரிப்பு
தில்லி கார் வெடித்துச் சிதறி விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, மும்பை, உத்தரப் பிரதேசம், கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தில்லி நகரின் முக்கிய இடங்களில் காவல் துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வழக்கமான ரோந்துப் பணிகள் மட்டுமின்றி தீவிர கண்காணிப்பில் ஈடுபட காவல் துறையினர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தலைவர்கள் இரங்கல்
தில்லி கார் வெடித்து விபத்துக்குள்ளான சம்பவத்துக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி உள்ளிட்டத் தலைவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க | ஜம்மு - காஷ்மீரில் 2,900 கிலோ வெடிப்பொருள் பறிமுதல்: தாக்குதல் திட்டம் முறியடிப்பு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.