

பலவீனமான பாஸ்வேர்ட் காரணமாக, ஹேக்கர்களால் கைப்பற்றப்பட்ட மருத்துவமனை சிசிடிவி காட்சிகள், பாலியல் இணையதளங்களில் விடியோவாக பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடு முழுவதுமிருந்து ஏராளமான மருத்துவமனைகள், பள்ளிகள், விடுதிகளில் பெண்களின் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவான விடியோக்கள், சமூக விரோத கும்பல்களால் ஹேக் செய்யப்பட்டு பாலியல் இணையதளங்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விடியோக்கள் பாலியல் இணையதளங்களில் பரவிக் கிடப்பது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஒரு விடியோ ரூ.700 முதல் ரூ.4,000 வரை டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டிருப்பதாகவும், இவர்கள், சர்வதேச பாலியல் இணையதள கும்பல்களுக்கு ஏராளமான விடியோக்களை விற்று பணம் சம்பாதித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
நாடு முழுவதும் சுமார் 20 மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகள், பள்ளிகள், விடுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஹேக் செய்யப்பட்டிருப்பதாகவும், இதில் பெரு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், திரையரங்குகள், தனியார் தங்கும் விடுதிகள் கூட சிக்கியிருப்பதாகவும் புனே, மும்பை, நாசிக், சூரத், அகமதாபாத், தில்லி உள்ளிட்ட நகரங்களும் இலக்காகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
மெகா எம்பிபிஎஸ் என்ற பெயரில், ராஜ்கோட்டில் அமைந்துள்ள ஒரு மருத்துவமனையின் மகப்பேறு பிரிவு விடியோ ஒன்று யூடியூப்பில் விளம்பரப்படுத்தப்பட்டபோதுதான், இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
முதற்கட்டமாக ராஜ்கோட் மருத்துவமனை சிசிடிவி காட்சிகள் அட்மின்123 என்ற மிக பலவீனமான பாஸ்வேர்ட் வைக்கப்பட்டிருந்ததே, ஹேக்கர்கள் மிக எளிதாக சிசிடிவி காட்சிகளைக் கையகப்படுத்தக் காரணமாக இருந்துள்ளது என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2025ஆம் ஆண்டு துவக்கத்திலேயே இது தொடர்பாக புகார்கள் வெளியாகி கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதும், கடந்த ஜூன் மாதம் வரை இதுபோன்ற ஏராளமான விடியோக்கள் டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் விற்பனைக்கு வந்திருப்பதாகவும் ஹேக் செய்யப்பட்ட பெரும்பாலான விடியோக்களுக்கு மிக பலவீனமான பாஸ்வேர்டுகள்தான் காரணமாக இருந்துள்ளதகாவும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.