

பிகார் மாநிலத்தில் இன்று இரண்டாம் கட்ட மற்றும் இறுதி வாக்குப்பதிவு நடைபெற்று முடியும் நிலையில், இன்று மாலை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகவிருக்கின்றன.
ஆளும் தேசிய ஜனநயாகக் கூட்டணிக்கும், இந்தியா கூட்டணிக்கும் இடையே நடக்கும் பலப்பரீட்சையில் யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்பது குறித்த கணிப்புகள் இன்று வெளியாகவிருக்கிறது.
முதல் கட்டத் தேர்தல் நவம்பர் 6ஆம் தேதி நடைபெற்ற நிலையில், நவம்பர் 14ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவிருக்கின்றன.
243 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட பிகார் பேரவையில் குறைந்தது 122 தொகுதிகளில் வென்ற கட்சிதான் ஆட்சியமைக்கும்.
இந்த தேர்தல் முடிவுகள், தற்போது முதல்வராக இருக்கும் நிதீஷ் குமாரே மீண்டும் முதல்வராவாரா? அல்லது மகாகத்பந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி, நிதீஷின் 20 ஆண்டு கால ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவாரா என்பது தெரியும்.
இன்று மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெற்றதும், முக்கிய ஊடகங்கள் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிடும். தேர்தல் முடிவுகளைப் போலவே, தேர்தல் கருத்துக் கணிப்புகளும் அதிகம் பேரால் எதிர்பார்க்கப்படுவதுதான்.
அதேவேளையில், கடந்தகால தேர்தல்களின்போது வெளியான கருத்துக் கணிப்புகளும் தேர்தல் முடிவுகளும் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டு வருகிறது.
கடந்த 2020 பேரவைத் தேர்தல்
2020 பிகார் பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடந்தன. ஒட்டுமொத்தமாக 57.29 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன. இந்த தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 75 தொகுதிகளில் வென்றிருந்தாலும் காங்கிரஸ் கட்சியின் மோசமான தோல்வியால் பிகாரில் ஆட்சியமைக்க முடியாமல் போனது.
இதனால், தேசிய ஜனநாயகக் கூட்டணி, நிதீஷ் குமாருடன் இணைந்து ஆட்சியமைத்து, அவரை முதல்வராக்கியது. பாஜக 74 தொகுதிகளில் வென்றிருந்தாலும், வெறும் 43 தொகுதிகளை வென்ற நிதீஷ் குமாருக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்தது பாஜக.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் சொன்னது என்ன?
தி டைம்ஸ் நௌ சி ஓட்டர் கருத்துக் கணிப்பு, தொங்கு பேரவை அமையும். தேசிய ஜனநாயகக் கூட்டணி 116 தொகுதிகளிலும் மகாகத்பந்தன் கூட்டணி 120 தொகுதிகளிலும் வெல்லும்.
பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள், பிகாரில் ஆளும் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை, தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மகா கூட்டணி அதிகத் தொகுதிகளில் வென்று முந்திச் செல்லும் என்றே கணித்திருந்தன.
இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா தேர்தல் கணிப்பு, மகாகத்பந்தன் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை அடையும். இந்த கூட்டணிக்கு 150 தொகுதிகள் கிடைக்கும். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 80 தொகுதிகள் கிடைக்கும்.
ஜன் கி பாத் பிகார் வெளியிட்ட கணிப்பில், தேசிய ஜனநாயகக் கூட்டணி 104 தொகுதிகளிலும், தேஜஸ்வி கூட்டணி 128 தொகுதிகளில் வெல்லும்.
டிவி9 பாரத்வர்ஷ் பிகார் தேர்தல் கணிப்பில், மகாகத்பந்தன் 120 தொகுதிகளில் வெல்லும். தேசிய ஜனநாயகக் கூட்டணி 115 தொகுதிகளைக் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தேர்தல் முடிவுகள் வேறு மாதிரி அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான், இன்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகவிருக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.