தில்லி கார் வெடிப்புக்குப் பின்னணியில் உள்ள சதிகாரர்களை தப்பிக்க விடமாட்டோம் என்றும் இதற்கு காரணமானவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் பூடானில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
பிரதமர் மோடி இன்று(நவ. 11) காலை பூடான் நாட்டிற்குச் சென்றுள்ள நிலையில் திம்பு பகுதியில் நடைபெறும் நிகழ்வில், தில்லி கார் வெடிப்பு சம்பவம் குறித்துப் பேசியுள்ளார்.
"இன்று நான் மிகவும் கனத்த இதயத்துடன் இங்கு வந்திருக்கிறேன். நேற்று மாலை தில்லியில் நடந்த கொடூரமான சம்பவம் நாட்டில் அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயரத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இன்று முழு நாடும் அவர்களுடன் நிற்கிறது.
இந்த சம்பவம் குறித்து விசாரிக்கும் அனைத்து விசாரணை அமைப்புகளிடமும் நான் நேற்று இரவு முழுவதும் தொடர்பில் இருந்தேன்.
எங்கள் புலனாய்வு அமைப்புகள் இந்த சதித்திட்டத்தின் பின்னணியைக் கண்டுபிடிக்கும். இதற்குப் பின்னால் உள்ள சதிகாரர்கள் ஒருபோதும் தப்பிக்க முடியாது. இதற்கு காரணமான அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்" என்று பேசியுள்ளார்.
நேற்று(நவ. 10) மாலை தில்லி செங்கோட்டை அருகே சாலையில் சென்ற கார் பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறியதில் இதுவரை 12 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பூடான் பயணம்
பூடானுக்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று(செவ்வாய்க்கிழமை) காலை புறப்பட்டுச் சென்றார்.
இப்பயணத்தின்போது, இந்தியாவின் உதவியுடன் பூடானில் கட்டமைக்கப்பட்ட 1,020 மெகாவாட் திறன்கொண்ட மிகப் பெரிய நீா்மின் நிலையத்தை அவா் திறந்துவைக்க உள்ளாா்.
மேலும், பூடான் மன்னா் ஜிக்மே கேசா் நாம்கியெல் வாங்சுக், பிரதமா் ஷெரிங் தோபே ஆகியோரை சந்தித்து, இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவான பேச்சுவாா்த்தையில் ஈடுபடவுள்ளாா்.
தற்போதைய மன்னரின் தந்தையும், முன்னாள் மன்னருமான ஜிக்மே சிங்கியே வாங்சுக்கின் 70-ஆவது பிறந்த நாள் கொண்டாட்ட விழாவில் பங்கேற்கவுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.