

தில்லியில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில், மனித உடல் பகுதிகளும், கார் பாகங்களும் காற்றில் பறந்ததாகவும், வெடித்த பொருள் பயங்கர சக்தி வாய்ந்ததாகவும், அதிகளவில் இருந்திருக்கலாம் என்றும் சந்தேகங்கள் வலுத்துள்ளன.
ஒரு சில வினாடிகளில், கார் வெடித்த இடம் போர்க்களம் போல காட்சியளித்தது. ஒரு காரின் மேல் மனித உடலும், சாலையில் ஆங்காங்கே மனித உடல் பகுதிகளும் சிதறிக் கிடந்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
தில்லி செங்கோட்டை அருகே திங்கள்கிழமை மாலை காா் ஒன்று பலத்த சப்தத்துடன் வெடித்த சம்பவத்தில் 13 போ் பலியாகினர், 24 போ் காயமடைந்தனர்.
வெடி விபத்தா அல்லது நாசவேலையா என்பது குறித்து, சம்பவம் நடந்து 12 மணி நேரத்துக்கு மேல் ஆகியும் இன்னமும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
தேசிய பாதுகாப்புப்படையினரும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தில்லியில் மக்கள் நடமாட்ட அதிகம் நிறைந்த செங்கோட்டை பகுதியில் இருந்து சுமாா் 150 மீட்டா் தொலைவில் இருக்கும் லால் கிலா மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் எண் 1 மற்றும் சுபாஷ் நகா் சிக்னல் அருகே காா் வெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது. இதில், ஆறு காா்கள், இரண்டு இ-ரிக்ஷாக்கள், ஒரு ஆட்டோ எரிந்து நாசமாகியிருக்கிறது.
சம்பவம் நடந்து பல மணி நேரங்கள் ஆன பிறகும் பல கேள்விகளுக்கு விடை காணப்படாமல் உள்ளது.
காரில் வெடிகுண்டு ஏதேனும் வைக்கப்பட்டு வெடிக்க வைக்கப்பட்டிருந்தால், அவ்விடத்தில் ஒரு மிகப்பெரிய சேதம், பள்ளம் ஏற்பட்டிருக்கும். ஆனால், அப்படி வாகனத்தில் ஓரிடத்திலும் பள்ளம் போன்று ஏற்படவில்லை.
ஒயர்களோ, சிறு உலோகத் துகள்களோ வெடிகுண்டுகளில் நிரப்பப்பட்டிருக்கும். அதுபோன்ற எந்த அமைப்பும் கண்டுபிடிக்கப்படவில்லை.
வெடித்த காரில் இருந்தவரும் அடையாளம் காணப்பட்டுள்ளார். எனவே, இது தற்கொலைப் படைத் தாக்குதலாக இருக்குமா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
இயங்கிக் கொண்டிருக்கும் வாகனத்திலிருந்து இவ்வளவு பெரிய வெடிபொருளை எவ்வாறு வெடிக்க வைக்க முடியும்? என்பதும் வெடிகுண்டு நிபுணர்களின் கேள்வியாக உள்ளது.
வெடித்த கார் பலரிடம் கைம்மாறி வந்திருக்கிறது, எனவே, பயங்கரவாத சதிச் செயலுக்காக இந்த கார் தேர்வு செய்யப்பட்டதா?
வெடித்த பொருள் என்னவென்று இதுவரை தடயவியல் துறையினரால் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் என்ன?
இதுபோன்ற எண்ணற்ற கேள்விகள் விசாரணை அமைப்பினருக்கு சவாலாக எழுந்துள்ளது.
செங்கோட்டைப் பகுதியிலிருந்து பகிரப்பட்ட ஒரு காணொலியில், ஒரு வாகனத்தின் மீது ஒரு மனித உடல் கிடக்கும் காட்சியும், மற்றொரு காணொலியில் சாலையில் ஒரு உடல் கிடக்கும் காட்சியும் இடம்பெற்றிருந்தன. எனவே, இவ்வளவு சக்தி வாய்ந்த பொருள் வெடித்திருக்கிறது என்றால் அது என்ன? இதுவரை அது பற்றி முழுமையான தகவ்கள் வெளியாகவில்லை.
சம்பவ இடத்தில் இருந்தவர்கள், அடுத்தடுத்து மூன்று முறை வெடிப்பு சப்தம் கேட்டதாகவும், இதுவரை தங்கள் வாழ்நாளில் அப்படி ஒரு சப்தத்தைக் கேட்டதேயில்லை என்றும் கூறியிருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.