

புது தில்லி: தில்லி செங்கோட்டை அருகே கார் வெடித்த சம்பவத்தில் 12 பேர் பலியாகினர். 24 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், இது தற்கொலைப் படைத் தாக்குதலாக இருக்கலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் உறுதி செய்திருப்பதாக ஏஎன்ஐ தகவல் தெரிவிக்கிறது.
ஃபரிதாபாத்தில், மருத்துவர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டு, ஏராளமான வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதால், குற்றவாளி என சந்தேகிக்கப்படும் டாக்டர் முகமது உமர், தில்லியில் மிகப்பெரிய தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்தியிருப்பதாக விசாரணை அதிகாரிகள் கூறியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தில்லி காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், தில்லி செங்கோட்டை கார் வெடிப்பு ஒரு தற்கொலைப் படைத் தாக்குதல், ஃபரிதாபாத்தில் தன்னுடைய கூட்டாளிகள் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்ததும், தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்த திட்டமிட்டு நடத்தியிருக்கிறார் என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.
இந்த கார் வெடிப்புக்குப் பின்னணி என்னவாக இருக்கலாம் என்று, பல்வேறு புலனாய்வு அமைப்புகளும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தில்லி செங்கோட்டை அருகே, மெட்ரோ ரயில் நிலைய நுழைவு வாயில் பகுதியில் திங்கள்கிழமை மாலை, மெதுவாக நகர்ந்து சென்றுகொண்டிருந்த கார், போக்குவரத்து நெரிசலில் வெடித்துச் சிதறியது. இதில் மிகப் பயங்கர, சக்திவாய்ந்த பொருள் வெடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த கார் வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, தில்லி காவல்துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள். தேசிய தலைநகர் தில்லி உச்சகட்ட கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.
சந்தேகிக்கப்படும் உமரின் சகோதரர்கள், தாய் உள்ளிட்டோரும் காவல்துறை வளையத்துக்குள் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். உமர் பணியாற்றி வந்த ஃபரிதாபாத் மருத்துவமனையும் கண்காணிப்பு வளையத்துக்குள் வைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநகரில் பாதுகாப்புக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டபோதுதான், பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாட்டிலிருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பை ஏற்படுத்தி, மருத்துவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட உயர் பதவியில் இருக்கும் சிலர், மற்றும் மாணவர்கள் பயங்கரவாத சதிச் செயலில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.