

தில்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது இல்லத்தில், பாதுகாப்புத் துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன், உளவுத்துறை இயக்குநர், தேசிய புலனாய்வு அமைப்பின் இயக்குநர் மற்றும் தில்லி காவல் ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
ஜம்மு - காஷ்மீர் டிஜிபி காணொலி வாயிலாக பங்கேற்றுள்ளார். தில்லி செங்கோட்டை அருகே திங்கள்கிழமை மாலையில் சாலையில் சென்ற கார் பலத்த சப்தத்துடன் வெடித்து சிதறியதில் 12 பேர் பலியான சம்பவத்தையடுத்து இந்தக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
சம்பவ பகுதியில் தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) குழுவினர் விசாரணை நடத்தினர். தேசிய பாதுகாப்புப் படையினரும் சம்பவ பகுதியில் இருந்து மாதிரிகளை சேகரித்துச் சென்றனர்.
தடயவியல் நிபுணர்கள் தனியாக சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். காவல் துறையின் சிறப்புப்பிரிவினர் இறந்தவர்களை அடையாளம் காணும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
தில்லி கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, செங்கோட்டையில் மூன்று நாள்களுக்கு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படாது என்று தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
செங்கோட்டை அருகேவுள்ள லால் கிலா மெட்ரோ நிலையமும் மறுஅறிவிப்பு வரும்வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.