வெடித்துச் சிதறிய காரின் 11 மணி நேரப் பயணம்!

தில்லி செங்கோட்டை அருகே திங்கள்கிழமை வெடித்துச் சிதறிய ஹுண்டாய் ஐ20 ரக கார் சம்பவத்துக்கு முன்பாக ஹரியாணாவின் ஃபரீதாபாதில் இருந்து தலைநகருக்குள் நுழைந்தது வரை அது 11 மணி நேரம் பயணித்ததாக தில்லி காவல்துறை கண்டுபிடித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.
தில்லியில் வெடித்துச் சிதறுவதற்கு முன்பாக சுங்கச் சாவடியொன்றைக் கடந்து சென்ற காரின் சிசிடிவி காட்சி.
தில்லியில் வெடித்துச் சிதறுவதற்கு முன்பாக சுங்கச் சாவடியொன்றைக் கடந்து சென்ற காரின் சிசிடிவி காட்சி.
Published on
Updated on
1 min read

நமது நிருபர்

தில்லி செங்கோட்டை அருகே திங்கள்கிழமை வெடித்துச் சிதறிய ஹுண்டாய் ஐ20 ரக கார் சம்பவத்துக்கு முன்பாக ஹரியாணாவின் ஃபரீதாபாதில் இருந்து தலைநகருக்குள் நுழைந்தது வரை அது 11 மணி நேரம் பயணித்ததாக தில்லி காவல்துறை கண்டுபிடித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.

அந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: ஃபரீதாபாதில் இருந்து தில்லிக்குள் சுங்கச்சாவடி வழியாக அந்த கார் நுழைந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் தரவுகள் அடிப்படையில் அது தில்லிக்குள் எங்கெல்லாம் பயணித்தது என்பதை புலனாய்வாளர்கள் ஒருங்கிணைத்துள்ளனர்.

திங்கள்கிழமை மாலை 6.52 மணியளவில் செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே வெடித்த அந்த கார் ஃபரீதாபாதிலிருந்து அதிகாலையில் புறப்பட்டது. முதலில் ஃபரீதாபாதில் உள்ள ஆசியா மருத்துவமனைக்கு வெளியே காலை 7.30 மணிக்குத் தென்பட்டது. காலை 8.13 மணிக்கு, அது பதர்பூர் சுங்கச்சாவடியைக் கடந்தது. இதன் மூலம் அந்த கார் தில்லிக்குள் நுழைந்தது.

காலை 8.20 மணிக்கு, ஓக்லா தொழில்பேட்டை பகுதிக்கு அருகிலுள்ள ஒரு பெட்ரோல் நிலையம் வழியாக அந்த வாகனம் செல்லும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. பிற்பகல் 3.19 மணிக்கு, கார் செங்கோட்டை வளாகத்தை ஒட்டிய ஒரு வாகன நிறுத்துமிடத்துக்குள் நுழைந்தது. அங்கு கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நிறுத்தப்பட்டிருந்தது.

மாலை 6.22 மணிக்கு, அங்கிருந்து புறப்பட்ட கார் செங்கோட்டை நோக்கிச் செல்வது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. கார் வெடிப்புக்கு முந்தைய 30 நிமிஷங்கள்தான் தற்போது புலனாய்வின் முக்கிய மையமாகும். வாகனத்துக்குள் இருந்தவர்களின் அடையாளத்தைக் கண்டறிய புலனாய்வாளர்கள் முயற்சி செய்து வருவதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் கூறுகையில், "வாகன நிறுத்தப் பகுதியை விட்டு கார் வெளியேறிய 24 நிமிஷங்களுக்குப் பிறகு, மாலை 6.52 மணியளவில் சாலையில் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தபோது அது வெடித்துச் சிதறியது. காரின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கவும், பகலில் அதனுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணவும் தில்லி மற்றும் அருகிலுள்ள தேசிய தலைநகர் வலயப் பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளைத் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம்' என்றனர்.

அதே வேளையில், தில்லி காவல் துறை வட்டாரங்கள் கூறுகையில், "வெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட கார் ஒரு பெட்ரோல் நிலையத்தில் தென்பட்டதாகத் தெரிய வந்துள்ளது. அங்குள்ள மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழ் வழங்கும் நிலையத்தில் அந்த கார் சென்றுள்ளது.

ஒருவேளை தலைநகரில் வாகனத்தை காவல் துறையினர் நிறுத்தினால் அவர்களிடம் காண்பிக்க காரின் அனைத்து ஆவணங்களும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதை ஓட்டிச்சென்றவர் அவ்வாறு செய்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். இதுவரை எங்களுக்கு கிடைத்துள்ள அனைத்துத் தகவல்களையும் ஒருங்கிணைத்து வருகிறோம்' என்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com