

தில்லி கார் வெடிப்பு சம்பவத்தில் பலியானவர்களில் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தில்லி செங்கோட்டை அருகே திங்கள்கிழமை மாலை காா் ஒன்று பலத்த சப்தத்துடன் வெடித்த சம்பவத்தில் 12 போ் பலியாகினர், 24 போ் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் கார் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தா? அல்லது பயங்கரவாதிகளின் நாச வேலையா? என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
இருப்பினும், வெடித்துச் சிதறிய ஹுண்டாய் ஐ-20 காரை ஓட்டியவர் மருத்துவராக பணிபுரிந்த முகமது உமர் என்றும், அவர் கூட்டாளிகளுடன் சேர்ந்து அம்மோனியம் நைட்ரேட் எரிபொருள் எண்ணெய் கொண்டு வெடிவிபத்தை நடத்தியதாகவும் குற்றப்புலனாய்வு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், தில்லி வெடிவிபத்தில் பலியானவர்களில் சிலரின் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. பேருந்து நடத்துநர், ஊபர் ஓட்டுநர், ஆட்டோ ஓட்டுநர் போன்ற ஏழை குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பலியாகியுள்ளனர்.
மீரட்டைச் சேர்ந்த மொஹ்சின், அம்ரோஹாவைச் சேர்ந்த பேருந்து நடத்துநர் அசோக் குமார் மற்றும் லோகேஷ், ஷ்ரவஸ்தியைச் சேர்ந்த தினேஷ் மிஸ்ரா, ஊபர் ஓட்டுநரான 22 வயது பங்கஜ், அமர் கட்டாரியா ஆகியோர் பலியானவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த கார் வெடித்ததில் அருகிலிருந்த ஆறு காா்கள், இரண்டு இ-ரிக்ஷாக்கள், ஒரு ஆட்டோ எரிந்து நாசமாகியிருக்கிறது. மனித உடல் பகுதிகள் சாலை முழுவதும் வெடித்துச் சிதறிக் கிடந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சில உடல்கள் மோசமாக சிதைந்துள்ளதால், அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, இ-ரிக்ஷா ஓட்டுநர் முகமது ஜுமான் காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.