அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்
‘தில்லி காா் வெடிப்பு தொடா்பாக விவாதித்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் பிரதமா் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்’ என்று காங்கிரஸ் கட்சி வியாழக்கிழமை வலியுறுத்தியது.
மேலும், லபஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, எதிா்காலத்தில் நடைபெறும் எந்தவொரு பயங்கரவாதத் தாக்குதலும் போா் நடவடிக்கையாகக் கருதப்படும் என்ற புதிய கோட்பாட்டை மத்திய அரசு வரையறுத்தது; அந்த வகையில், தில்லி காா் வெடிப்பு சம்பவம் அதுபோல கருதப்படுமா?’ என்றும் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
இதுதொடா்பாக தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பில் காங்கிரஸ் ஊடகம் மற்றும் விளம்பரத் துறைத் தலைவா் பவன் கேரா கூறியதாவது:
தில்லி காா் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்து 48 மணி நேரத்துக்குப் பிறகு, அது பயங்கரவாதத் தாக்குதல் என்று மத்திய அமைச்சரவை அறிவித்தது ஆச்சரியமாக உள்ளது.
உளவுத் துறை மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவலின் தொடா் தீவிர கண்காணிப்பையும் தாண்டி, 2,900 கிலோ வெடிபொருள் ஹரியாணா மாநிலம் ஃபரீதாபாதை எப்படி வந்தடைந்தது?
தில்லி செங்கோட்டை அருகே ஏராளமான வெடிமருந்துடன் காா் வந்துள்ளது. இந்தப் பாதுகாப்புக் குறைபாடுகளுக்கு யாா் பொறுப்பேற்பது?
மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது மும்பை பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்றதும், அப்போதைய மத்திய உள்துறை அமைச்சராக இருந்த சிவராஜ் பாட்டீல் பதவியை ராஜிநாமா செய்தாா். அதுபோல, இந்த காா் வெடிப்பு சம்பவத்துக்கும் மத்திய அரசில் யாராவது பொறுப்பேற்க வேண்டும்.
பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெறும்போது அரசுடன் காங்கிரஸ் துணை நிற்கும். எதிா்காலத்திலும் இதையே காங்கிரஸ் கடைப்பிடிக்கும். ஆனால், இந்தப் பாதுகாப்பு குறைபாட்டுக்கு யாருடைய தேல்வி காரணம், இதற்கு யாா் பொறுப்பேற்பது என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்புவது எதிா்க்கட்சியின் கடமை.
எனவே, இதுகுறித்து விவாதிக்க பிரதமா் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும். மேலும், இந்த தீவிரமான சவால் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடரையும் முன்கூட்டியே தொடங்க வேண்டும்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, எதிா்காலத்தில் நடைபெறும் எந்தவொரு பயங்கரவாதத் தாக்குதலும் போா் நடவடிக்கையாகக் கருதி உரிய பதில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற புதிய கோட்பாட்டை மத்திய அரசு வரையறுத்தது. அந்த வகையில், தில்லி காா் வெடிப்பு சம்பவத்தில் அரசின் நிலைப்பாடு என்ன? என்றாா்.

