

புது தில்லி: தில்லி செங்கோட்டை அருகே நவ.10ஆம் தேதி மாலை நடந்த கார் குண்டு வெடிப்புச் சம்பவத்தில், காரை ஓட்டி வந்தவர் உமர் உன் நபி (35) என்ற மருத்துவர்தான் என்பதை டிஎன்ஏ சோதனைகள் மூலம் உறுதி செய்திருப்பதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த உமர், ஹரியாணா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
இவர்தான், ஹுண்டாய் ஐ20 மாடல் வெள்ளை நிறக் காரை, ஃபரிதாபாத்திலிருந்து ஓட்டி வந்தவர் என்பதும், செங்கோட்டை அருகே வெடிகுண்டு தாக்குதல் நடத்தி பலர் உயிரிழக்கக் காரணமாக இருந்தார் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மிகப் பயங்கர கார் குண்டு வெடிப்பில், உமர் ஓட்டி வந்த ஐ20 காரின் ஆக்ஸிலேட்டர் மற்றும் ஸ்டியரிங் இடையே காலின் பாகங்கள் சிக்கியிருந்ததாகவும், அதனை, அங்கு ஆய்வு செய்த தடய அறிவியல் ஆய்வுக் கூட நிபுணர்கள் கண்டறிந்து, அதனைக் சேகரித்து வைத்திருந்தனர்.
மேலும், தேசிய புலனாய்வு அதிகாரிகள், புல்வாமாவில் உள்ள உமர் நபியின் தாயிடமிருந்து டிஎன்ஏ மாதிரிகளை சேகரித்துக் கொண்டு தில்லி எடுத்து வந்து ஆய்வு செய்ததில், இரண்டு மாதிரிகளும் ஒத்துப்போவது கண்டறியப்பட்டு, காரை ஓட்டி வந்தது உமர் உன் நபி என்பதை உறுதி செய்திருக்கிறார்கள்.
இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், கார் குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்த இடத்திலிருந்தும், அருகில் உள்ள கடைகள் உள்ளிட்ட இடங்களிலிருந்தும் ஏராளமான டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அவ்வாறு சேகரித்தபோது, காரின் ஆக்ஸிலேட்டர் - ஸ்டியரிங் இடையே சிக்கி பயங்கரமாக சேதமடைந்திருந்த ஒரு மனிதக் கால் பகுதி கிடைத்திருந்தது. அதிலிருந்து திரட்டப்பட்ட டிஎன்ஏ மாதிரிதான், நபியின் தாய் டிஎன்ஏ-உடன் ஒத்துப்போயிருப்பதாக தடய அறிவியல் நிபுணர்கள் உறுதி செய்திருப்பதாகவும், காஷ்மீரில் அவர் விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அவரிடம் டிஎன்ஏ மாதிரிகளை சேகரிக்கப்பட்டு விமானம் மூலம் கொண்டுவரப்பட்டு, தடய அறிவியல் நிபுணர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அல் பலாஹ் பல்கலையில் உமர் உன் நபி உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கும் கைதான முஸாமில் மற்றும் அதீலுக்கும் தொடர்பு இருந்ததும், இவர்கள் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதும், ஒன்றாக பணியாற்றி வந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நவ.10ஆம் தேதி குண்டு வெடிப்பு நடத்தப்படுவதற்கு 11 நாள்கள் முன்புதான், இந்த ஐ20 மாடல் காரை உமர் வாங்கியிருப்பதும், இதுபோல அவர் இன்னும் 3 கார்களை வாங்கி தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.