மின் வாகன கொள்கையை மாநகரங்களிலிருந்து நடைமுறைப்படுத்த வேண்டும்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

மின் வாகன கொள்கையை மாநகரங்களிலிருந்து நடைமுறைப்படுத்த வேண்டும்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

‘தேசிய மின் வாகன கொள்கையை தற்போதைய நிலவரத்துக்கு ஏற்ப தேவையான மாற்றங்களை மேற்கொண்டு, மாநகரங்களிலிருந்து நடைமுறைப்படுத்த வேண்டும்
Published on

‘தேசிய மின் வாகன கொள்கையை தற்போதைய நிலவரத்துக்கு ஏற்ப தேவையான மாற்றங்களை மேற்கொண்டு, மாநகரங்களிலிருந்து நடைமுறைப்படுத்த வேண்டும்’ என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை அறிவுறுத்தியது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காற்று மாசை கட்டுப்படுத்தும் நோக்கில் மக்களிடையே மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் ‘தேசிய மின் இயக்கத் திட்டம் (என்இஎம்எம்பி) 2020’ என்ற மின் வாகன கொள்கையை மத்திய அரசு கொண்டுவந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் இக் கொள்கை இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இந்த நிலையில், மின் வாகனக் கொள்கையை நடைமுறைப்படுத்தக் கோரி பொதுநல மனுக்களுக்கான அரசு சாரா தன்னாா்வ மையம் (சிபிஐஎல்) சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரிய காந்த், ஜாய்மால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் பிரசாந்த் பூஷன், ‘மின் வாகனக் கொள்கையை நடைமுறைப்படுத்த நீதி ஆயோக் உள்ளிட்ட அமைப்புகளும் மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளன’ என்றாா்.

அப்போது குறுக்கிட்ட அரசு தரப்பில் ஆஜரான அட்டா்னி ஜெனரல் வெங்கடரமணி, ‘இக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மத்திய அரசின் 13 அமைச்சகங்கள் ஆராய்ந்து வருகின்றன. எனவே, இக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘மின் வாகனக் கொள்கையை மத்திய அரசு கொண்டுவந்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்போது, இக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்த 5 ஆண்டுகளில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த நடைமுறை மாற்றங்கள் மற்றும் மின் வாகனம் வாங்குபவா்களுக்கு ஊக்கத் தொகை, போதிய மின்னேற்று நிலையங்கள் அமைக்கப்படுவது உள்ளிட்ட தேவைகளுக்கு ஏற்ப மின் வாகனக் கொள்கையை மறு ஆய்வு செய்யவேண்டும். அதன் பிறகு, முன்னோடித் திட்டமாக மாநகரங்களிலிருந்து அக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com