

பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சித் தொண்டர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் அனந்த் குமார் சிங் வெற்றி பெற்றுள்ளார்.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன. மாலை 4 மணி நிலவரப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி 204 தொகுதிகளில் முன்னிலை பெற்று வலுவான நிலையில், 5 தொகுதிகளில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
அதேவேளை, மகாகத்பந்தன் கூட்டணி 27 தொகுதிகளிலும், மற்றவை 7 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன.
இந்த நிலையில், சர்ச்சைக்குரிய முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஐக்கிய ஜனதா தளத்தின் மொகாமா தொகுதியின் வேட்பாளருமான அனந்த் சிங் 28,206 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றுள்ளார்.
மொகாமா தொகுதியில் 26 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கையின் முடிவில், அனந்த் குமார் சிங் 91,416 வாக்குகளும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ராஷ்டிரிய ஜனதா தளத்தின் வீணா தேவி 63,210 வாக்குகளும் பெற்றனர்.
முன்னதாக, பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சித் தொண்டர் துலர்சந்த் யாதவ் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், சர்ச்சைக்குரிய முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஐக்கிய ஜனதா தளத்தின் மொகாமா தொகுதியின் வேட்பாளருமான அனந்த் குமார் சிங்கை பாட்னா காவல் துறை அதிகாரிகள் நவ. 1 ஆம் தேதி இரவு கைது செய்தனர். தற்போது அனந்த் குமார் சிங் நீதிமன்றக் காவலில் உள்ளார்.
பிகாரில் பிரபல தாதாவான அனந்த் சிங், ராஷ்ரிடிய ஜனதா தளத்தில் இருந்து பின், ஐக்கிய தனதா தளத்தில் இணைந்து எம்.எல்.ஏ.வானார். அனந்த் சிங்கின் மனைவி நீலம் தேவி தற்போது மொகாமா எம்.எல்.ஏவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.