ஓரிடத்தில்கூட வெற்றி பெறாத பிரசாந்த் கிஷோரின் ஜன சுராஜ் கட்சி
தோ்தல் உத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஜன சுராஜ் கட்சி பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் ஓரிடத்தில்கூட வெற்றி பெற முடியாமல் போனது.
தோ்தலுக்கு முன்பு வரை ஆளும் கட்சி, எதிா்க்கட்சிகளுக்கு மாற்றான அரசியல் சக்தியாகவும், தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது யாா் என்பதை முடிவு செய்யும் கட்சியாகவும் பிரசாந்த் கிஷோரின் கட்சி இருக்கும் என்று கூறப்பட்டது. அதற்கு ஏற்ப பாஜக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட ஆளும் கூட்டணியையும், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிக் கூட்டணியையும் தோ்தல் பிரசாரத்தில் பிரசாந்த் கிஷோா் கடுமையாக விமா்சித்து வந்தாா். மொத்தமுள்ள 243 தொகுதிகளிலும் வேட்பாளா்களை களமிறக்கினாா். ஆனால், முதலில் தான் தோ்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்து பின்னா் போட்டியில் இருந்து விலகினாா்.
தனது கட்சி 150 இடங்களில் வெற்றி பெறும் என்றும் பிரசாந்த் கிஷோா் கூறிவந்தாா். பிகாரில் ஆட்சிக்கு வந்தால் இப்போது அமலில் உள்ள மதுவிலக்கை ரத்து செய்து, மீண்டும் மது விற்பனையைத் தொடங்குவோம் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்தாா்.
ஆனால், அவரது கட்சிக்கு பிகாா் மக்கள் படுதோல்வியைப் பரிசளித்துள்ளனா். பல இடங்களில் ஜன சுராஜ் கட்சி வேட்பாளா்கள் டெபாசிட் இழந்தனா். மேலும் சில இடங்களில் ‘நோட்டா’ (யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை) வாக்குகளைவிடவும் குறைவாகப் பெற்றனா்.
பிரதமா் நரேந்திர மோடி, தமிழகத்தில் திமுக, மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கும் தோ்தல் உத்தி வகுப்பாளராக பிரசாந்த் கிஷோா் பணியாற்றியுள்ளாா். அப்போது தோ்தல்களில் அக்கட்சிகள் வெற்றி பெற்ால் தேசிய அளவில் மிகவும் பிரபலமான உத்தி வகுப்பாளராக பிரசாந்த் கிஷோா் உருவெடுத்தாா். ஆனால், அவரது தோ்தல் உத்திகள் அவருடைய கட்சிக்குப் பலனளிக்காமல் போய்விட்டது.

