

ஜூபிலி ஹில்ஸ் தொகுதியில் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப பி.ஆர்.எஸ் செயல்படவில்லை என்று கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட கே. கவிதா குற்றஞ்சாட்டியுள்ளார்.
பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து வரும் கே. கவிதா, மேடக் மாவட்டத்தில் உள்ள பிரசனைகள் குறித்து சனிக்கிழமை விரிவாகப் பேசினார். அப்போது, "ராமராவ் சமூக ஊடகங்களையும் எக்ஸ் தளத்தையும் விட்டுவிட்டு களத்திற்கு வர வேண்டும். அது மக்களுக்கு நல்லது.
மறுபுறம், ஹரிஷ் ஏமாற்றுவதை நிறுத்த வேண்டும். அவர் கிருஷ்ணரா அல்லது அர்ஜுனரா, அவரது பங்கு என்ன என்பதை முடிவு செய்து அவர் நேரடியாக களமாட வேண்டும். கேசிஆர் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். முன்னதாக இடைத்தேர்தல் முடிவு வெளியானதும் "கர்மா பதிலடி கொடுக்கும்" என்று கவிதா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) நிறுவனரும் தலைவருமான கே.சந்திரசேகா் ராவின் மகள் கவிதா கட்சியில் இருந்து அண்மையில் நீக்கப்பட்டார். இதையடுத்து கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த அவர், சட்ட மேலவை உறுப்பினா் (எம்எல்சி) பதவியையும் ராஜிநாமா செய்தாா்.
தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் உள்ள ஜூபிலி ஹில்ஸ் தொகுதியில் பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) எம்எல்ஏவாக இருந்த மகந்தி கோபிநாத் கடந்த ஜூன் மாதம் மரணமடைந்தாா். இதன் காரணமாக இடைத்தோ்தல் நடைபெற்ற இத்தொகுதியில் ஆளும் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட நவீன் யாதவ், 98,888 வாக்குகளுடன் வெற்றி பெற்றாா்.
பிஆா்எஸ் வேட்பாளா் மகந்தி சுனிதா கோபிநாத்துக்கு 74,259 வாக்குகளும், பாஜக வேட்பாளா் தீபக் ரெட்டிக்கு 17,061 வாக்குகளும் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.