

பழங்குடி சமூகங்களை காங்கிரஸ் கைவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.
குஜராத்தில் ஒருநாள் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, பழங்குடியினர் சமூகத்தின் தெய்வமான பண்டோரி மாதா கோயிலில் வழிபாடு செய்தார்.
தொடர்ந்து, பழங்குடியினத் தலைவர் பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், ``நமது நாட்டின் சுதந்திரப் போராட்டத்திற்கு பழங்குடியினர் பெரிதும் பங்களித்தனர். ஆனால், 60 ஆண்டுகளாக, பழங்குடியினரை காங்கிரஸ் கைவிட்டதுடன், அவர்களின் பங்களிப்புகளையும் அங்கீகரிக்கத் தவறி விட்டது.
பழங்குடி சமூகத்தின் வேர்கள், கடவுளான ராமர் வரை நீண்டுள்ளன. இருப்பினும், இந்தியாவின் முன்னேற்றத்தில் அவர்களின் பங்களிப்பை முந்தைய அரசாங்கங்கள் ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை.
இன்றைய இந்தியாவின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர். ஆதிவாசி ஓவியர் பரேஷ் ராத்வா பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார்.
ஒடிசா முதல்வர் சரண் மாஜி, சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தேவ் சாய், நாகாலாந்தின் நெய்ஃப்யூ ரியோ, அருணாசல பிரதேசத்தின் முதல்வர் பெமா காண்டு ஆகியோர் மாநில வளர்ச்சிக்காக உழைத்து வருகின்றனர்.
பழங்குடி சமூகங்களுக்கு அங்கீகாரம் மற்றும் பிரதிநிதித்துவம் ஆகிய இரண்டையும் வழங்கிய முதல் கட்சி பாஜக’’ என்று தெரிவித்தார்.
மேலும், சமீபத்தில் உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் மகளிரணியிலும் ஒருவர் பழங்குடியைச் சேர்ந்தவர் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இதையும் படிக்க: பிகாரில் ஆளும் கூட்டணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் மோடியா? நிதீஷ் குமாரா? -சந்திரபாபு நாயுடு பதில்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.