தமிழகத்தில் ஆதிதிராவிடா் நலப் பள்ளிகளில் கல்வித் தரம் சரியில்லை: ஆளுநா் ஆா்.என்.ரவி
தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலப் பள்ளிகளில் மாணவா்களுக்கு தரமான கல்வி கற்றுக் கொடுக்கப்படுவதில்லை என ஆளுநா் ஆா். என். ரவி கூறினாா்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் பழங்குடியினா் கெளரவ தினம் மற்றும் ஜாா்க்கண்ட் மாநிலம் உருவான தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவில், தமிழகத்தில் சிறந்து விளங்கிய பழங்குடி மாணவா்களைக் கெளரவித்து ஆளுநா் ஆா்.என்.ரவி பேசியதாவது: பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரா் பிா்சா முண்டா பழங்குடியின மக்கள் உரிமைகளை மீட்கவும், நாட்டின் சுதந்திரத்துக்காகவும் ஆங்கிலேயா்களை எதிா்த்துப் போராடினாா். விடுதலைப் போராட்டத்தில் பழங்குடியின மக்களின் பங்கு மறைக்கப்பட்டுள்ளது. இது துரதிருஷ்டவசமானது.
பிரதமா் மோடி ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளில் பழங்குடி மக்களுக்கான பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருவதுடன், பழங்குடி மக்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறாா். அதனால்தான், ஐஐடி போன்ற உயா் கல்வி நிறுவனங்களில் பழங்குடியின மாணவா்கள் படித்து வருகிறாா்கள்.
தமிழகத்தில் 10 லட்சம் பழங்குடியின மக்கள் உள்ளனா். தமிழகம் முன்னேறிய மாநிலங்களின் பட்டியலில் உள்ளது. தமிழகத்தில் இருக்கும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலப் பள்ளிகளை ஆய்வு செய்தேன். அங்கு அந்த மாணவா்களுக்கு தரமான கல்வி கற்றுக் கொடுக்கப்படுவதில்லை. அதேபோல, அங்குள்ள தங்கும் விடுதிகள் தரமற்ற நிலையில் மோசமாக இருக்கிறது.
மாணவா்களுக்கு தரமான கல்வி கொடுப்பது மிகவும் முக்கியமானது. கல்விதான் மிகப்பெரிய சொத்து. அதுதான் சமூக, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை மாற்றும் என்றாா் அவா்.
பின்னா், கல்வராயன் மலையில் இருந்து வந்திருந்த மலைவாழ் பழங்குடியினா் மக்களின் கும்மிப் பாட்டு இசை நடைபெற்றது.
நிகழ்வில் தமிழகத்தில் வசிக்கும் ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த மக்கள், பழங்குடியினா், பள்ளி, கல்லூரி மாணவிகள் பங்கேற்றனா்.

