

பாகிஸ்தானில் இருந்து போதைப் பொருள்கள் மற்றும் ஆயுதங்களைக் கடத்த முயன்ற 255 ட்ரோன்கள் இந்தாண்டில் மறித்து அழிக்கப்பட்டிருப்பதாக எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) அதிகாரி தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் ட்ரோன்கள் மூலம் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஹெராயின் போன்ற போதைப் பொருள்கள் மற்றும் சட்டவிரோத ஆயுதங்களைக் கடத்தும் செயல் அதிகரித்து வருகின்றது.
இதுதொடர்பாக தீவிர கண்காணிப்பில் ஈடுபடும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் பாகிஸ்தானில் இருந்து வரும் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தி வருகின்றனர்.
இந்த சம்பவங்கள் தொடர்பாக அமிர்தசரஸில் உள்ள பிஎஸ்எஃப் மண்டலத் தலைவர் அதுல் ஃபுல்சேல் பேசியதாவது:
”பனிக் காலத்தில் நிலவும் அதீத பனிமூட்டத்தைப் பயன்படுத்தி பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் ஊடுருவல், கடத்தல் உள்ளிட்டவையை முறியடிக்க சிறப்பு கண்காணிப்பு உபகரணங்கள் பயன்படுத்தப்படுகிறது. ஆறுகளின் கரையோரத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
எல்லைப் பகுதிகளில் உள்ள சாலைகளில் கடத்தைத் தடுக்க, பிஎஸ்எஃப் மற்றும் பஞ்சாப் காவல்துறை இணைந்து கூட்டுச் சோதனைகள் நடத்தி வருகின்றனர்.
இந்தாண்டில் இதுவரை 255 பாகிஸ்தான் ட்ரோன்கள் எல்லையில் மறித்து சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன.” எனத் தெரிவித்தார்.
இந்த ட்ரோன்களில் கடத்த முயன்ற 329 கிலோ ஹெராயின், 16 கிலோ ஐஸ் (மெத்தாம்பேட்டமைன்), 191 ஆயுதங்கள், 12 கையெறிக் குண்டுகள் மற்றும் 10 கிலோவுக்கும் அதிகமான வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், பாகிஸ்தானில் இருந்து ஊடுருவ முயன்ற 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடத்தலில் ஈடுபட்ட 19 பாகிஸ்தானியர்கள் மற்றும் 240 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.