

தில்லி கார் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டிருக்கும் பெண் டாக்டர் ஷாஹீன், மற்றொரு டாக்டர் முஸாமில் ஆகியோர் ரொக்கமாகக் கொடுத்து புதிய கார் ஒன்றை வாங்கியிருந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஃபரிதாபாத்தில் உள்ள அல் பலாஹ் பல்கலைக்கழகத்திலிருந்து அந்த காரை தேசிய புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த புதிய காரை, கடந்த செப்டம்பர் மாதம் ஷாஹீன் மற்றும் முஸாமில் ஆகியோர் ரொக்கமாகக் கொடுத்து வாங்கியதாகவும், காரை வாங்கும்போது எடுத்தப் புகைப்படங்கள் வெளியாகியிருப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த கார், டாக்டர் ஷாஹீன் ஷாஹித் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் செப்டம்பர் மாதம்தான் இந்த புதிய கார் வாங்கப்பட்டுள்ளதும், விசாரணை அதிகாரிகளுக்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
ஏற்கனவே, தில்லி செங்கோட்டைப் பகுதியில் ஐ20 வகை கார் குண்டுவெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பயங்கரவாதிகள் வாங்கியிருந்த சிவப்பு நிறக் காரும் ஃபரிதாபாத்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்டிருந்த நிலையில், பல்கலைகழகத்திலிருந்து இந்தக் காரும் பறிதல் செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய விசாரணையில், இந்த பயங்கரவாத கும்பல், நவம்பர் 25ஆம் தேதி ராமர் கோயிலில் கொடியேற்றத்தின்போது அயோத்தியாவில் தற்கொலைத் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது தெரிய வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அம்மோனியம் நைட்ரேட், ஆர்டிஎக்ஸ் ஆகியவற்றை இவர்கள் சேகரித்து சேமித்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டாலும், தில்லி குண்டு வெடிப்பின்போது பயன்படுத்தப்பட்ட வெடிபொருள் பற்றிய தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
இந்த பயங்கரவாத சதித் திட்டம் 2022ஆம் ஆண்டு துருக்கியிலிருந்து தீட்டப்பட்டிருக்கலாம் என்றும், துருக்கியிலிருந்து செயல்படும் பயங்கரவாதத் தலைவரின் கீழ் உமர் செயல்பட்டிருக்கலாம் என்றும், அவரது குறியீட்டுப் பெயர் உகாசா என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.