தோல்விக்கு 100% பொறுப்பேற்கிறேன்! பிரசாந்த் கிஷோர்

தோல்விக்குப் பொறுப்பேற்பதாக பிரசாந்த் கிஷோர் தெரிவித்திருப்பது பற்றி...
பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்ANI
Published on
Updated on
1 min read

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு 100 சதவீதம் நானே பொறுப்பேற்கிறேன் என்று ஜன்சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் 238 தொகுதிகளில் போட்டியிட்ட ஜன்சுராஜ் கட்சி, ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. மேலும், 4 தொகுதிகளைத் தவிர, மற்ற இடங்களில் டெபாசிட்டை இழந்து படுதோல்வியைச் சந்தித்தது.

இந்த நிலையில், தேர்தல் தோல்விக்கு 100 சதவீத பொறுப்பையும் தானே ஏற்பதாக பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

பாட்னாவில் செவ்வாய்க்கிழமை காலை செய்தியாளர்களை சந்தித்த பிரசாந்த் கிஷோர் பேசியதாவது:

”நாங்கள் நேர்மையாக முயற்சி மேற்கொண்டோம், ஆனால் முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது. இதனை ஏற்றுக் கொள்வதில் எந்த தயக்கமும் இல்லை. அதிகாரத்தில்கூட எங்களால் மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை. ஆனால், பிகார் அரசியல் மாற்றத்துக்கு சில பங்குகளை அளித்துள்ளோம்.

எங்கள் முயற்சி, சிந்தனை குறித்து நாங்கள் விளக்கிய விதத்தில் ஏதேனும் தவறு இருந்திருக்கக் கூடும். அதனால், மக்கள் எங்களைத் தேர்ந்தெடுக்கவில்லை. மக்களுக்கு எங்கள் மீது நம்பிக்கையில்லை என்றால், அதற்கு நானே பொறுப்பேற்கிறேன். தேர்தல் தோல்விக்கு 100% பொறுப்பையும் நானே ஏற்கிறேன்.

கடந்த மூன்று ஆண்டுகளாக நீங்கள் பார்த்தைவிட இரண்டு மடங்கு உழைப்பேன். பின்வாங்கும் கேள்விக்கே இடமில்லை. பிகாரை மேம்படுத்துவதற்கான எனது உறுதியை நிறைவேற்றும் வரை பின்வாங்க முடியாது.

பிகார் மக்கள் எதனடிப்படையில் வாக்களிக்க வேண்டும். ஏன், புதிய அரசை உருவாக்க வேண்டும் என்பதை விளக்கத் தவறிவிட்டேன். எனவே, அதற்கு பிராயச்சித்தமாக, வருகின்ற நவ. 20 ஆம் தேதி காந்தி ஆசிரமத்தில் ஒரு நாள் மெளன விரதம் அனுசரிக்க உள்ளேன். நாங்கள் தவறு செய்திருக்கலாம், ஆனால் எந்தக் குற்றமும் செய்யவில்லை. சமூகத்தில் சாதி அடிப்படையிலான விஷத்தைப் பரப்பிய குற்றத்தை நாங்கள் செய்யவில்லை. பிகாரில் இந்து-முஸ்லீம் அரசியலில் நாங்கள் ஈடுபடவில்லை. மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுப் படுத்தும் குற்றத்தை நாங்கள் செய்யவில்லை. ஏழை, அப்பாவி மக்களுக்கு பணம் கொடுத்து, அவர்களின் வாக்குகளை வாங்கிய குற்றத்தையும் நாங்கள் செய்யவில்லை.

பெண்களுக்கு ரூ. 10,000 கொடுக்கவில்லை என்றால் நிதீஷ் குமார் 25 இடங்களில்கூட வெற்றி பெற்றிருக்க மாட்டார். தேர்தல் வாக்குறுதியின்படி, ஒன்றரை கோடி பேருக்கு தலா ரூ. 2 லட்சம் நிதீஷ் அளித்துவிட்டால், அரசியலில் இருந்தே ஓய்வுபெறுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும் பலத்துடன் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இந்தியா கூட்டணியில் போட்டியிட்ட ராஷ்டீரிய ஜனதா தளம் 25 தொகுதிகளிலும், காங்கிரஸ் 6 தொகுதிகளிலும் மட்டுமே வெற்றி பெற்றது.

Summary

I take 100% responsibility for the loss! Prashant Kishor

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com