

தற்கொலைத் தாக்குதல் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது, அது ஒரு தியாகச் செயல் என தில்லி குண்டு வெடிப்பு சம்பவத்தில் மருத்துவர் உமர் பேசிய விடியோ அல் பலாஹ் பல்கலையின் 17வது கட்டடத்தின் அறையிலிருந்து எடுக்கப்பட்டது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
தில்லி செங்கோட்டை அருகே மெட்ரோ ரயில் நிலைய நுழைவுவாயில் அருகே நவ. 10 ஆம் தேதி மாலை காரில் இருந்த வெடிபொருள்கள் வெடித்துச் சிதறிய சம்பவத்தில் 15 பேர் பலியாகினர். மேலும், 20 க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
இந்த கார் வெடிப்பு சம்பவத்தை பயங்கரவாதத் தாக்குதல் என உறுதிப்படுத்தியுள்ள தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்திய மருத்துவர் உமர் நபி மற்றும் இந்த சதிச் செயலில் தொடர்புடைய பலரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், தற்கொலைத் தாக்குதல் நடத்திய உமர் பேசியிருக்கும் விடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. கார் குண்டுவெடிப்புத் தாக்குதல் நடந்த நவம்பர் 10 ஆம் தேதிக்கு முன் பதிவு செய்யப்பட்டிருக்கும் விடியோவில், உமர் நபி தனியாக ஒரு அறையில் அமர்ந்து விவாதிப்பதைப் போன்று காட்டுகிறது.
அந்த விடியோவில், அவர் கூறுகையில், ஒருவர் ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் நிச்சயமாக சாகப் போகிறார் என்று முன்பே தெரிந்தும் அந்தக் காரியத்தைச் செய்வதால் அதைத் தியாகச் செயல்தான் என்று சொல்ல வேண்டும். அதனால், மரணத்திற்கு அஞ்சாதீர்கள்” என குறிப்பிட்டிருந்தார்.
இந்த விடியோ பதிவான தேதி எதுவாக இருக்கும் என்று தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போதைக்கு, பல்கலையின் 17வது கட்டடத்தின் அறை எண் 13ல் இந்த விடியோ படமாக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.
ஒன்று, பல்கலையைச் சேர்ந்த மருத்துவர்கள் கைது செய்யப்பட்டபோது இந்த விடியோ படமாக்கப்பட்டிருக்கலாம் அல்லது தற்கொலைத் தாக்குதல் சதி திட்டத்துக்காக இது படமாக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
உமரும், ஷகீலும் 17வது கட்டடத்தில் தங்கியிருந்துள்ளனர். இந்த விடியோ, அந்த கட்டடத்தின் மேல் தளத்தில் உள்ள அறையில் படமாக்கப்பட்டிருக்கலாம் என்பது, உமர் பேசிய பிறகு, அந்த விடியோ, ஒரு திறந்த ஜன்னலை நோக்கி திருப்பப்படும்போது பதிவான காட்சியைக் கொண்டு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லி - ஹரியாணா எல்லைப் பகுதிதியல் 70 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது அல் பலாஹ் பல்கலைக்கழகம். இங்குதான் உமர் பணியாற்றியிருக்கிறார். இங்கு பணியாற்றி வந்த மேலும் சில மருத்துவர்களும் பயங்கரவாத நடவடிக்கைகளில் தொடர்பிருப்பதாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.