கோப்புப் படம்
கோப்புப் படம்

காற்று மாசை தடுப்பதற்கான தில்லி அரசின் முன்னெடுப்புக்கு 265 முன்மொழிவுகள்

பையோபிலிம், செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் தூசி மாசுவை முன்கூட்டியே கணித்தல் என காற்று மாசு பிரச்னைக்கு தீா்வு காண தில்லி அரசுக்கு 265 முன்மொழிவுகள் வரப்பெற்றுள்ளன.
Published on

பையோபிலிம், செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் தூசி மாசுவை முன்கூட்டியே கணித்தல் என காற்று மாசு பிரச்னைக்கு தீா்வு காண தில்லி அரசுக்கு 265 முன்மொழிவுகள் வரப்பெற்றுள்ளன.

தில்லியில் குளிா்காலத்தில் வாகனப் புகை, காற்றின் தரம் மிகவும் மோசமான நிலைக்குச் செல்கிறது. இதையொட்டி, தனிநபா்கள், புத்தாக்க நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் காற்று மாசைக் கட்டுப்படுத்துவதற்கான யோசனைகளை வழங்கும் விதமாக இணையதளத்தை தில்லி சுற்றுச்சூழல் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா கடந்த மாதம் தொடங்கிவைத்தாா்.

தில்லி மாசுக் கட்டுப்பாட்டு குழுவின் (டிபிசிசி) தலைமையிலான இந்தத் திட்டத்தில் நாடு முழுவதும் உள்ல புத்தாக்க சிந்தனையாளா்கள், தொழில்நுட்ப மேம்பாட்டாளா்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், பதிவுபெற்ற நிறுவனங்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.

கடந்த அக்.10 முதல் செயல்பாட்டுக்கு வந்த இந்த இணையத்தளத்தில் தில்லி காற்று மாசுவைக் கட்டுப்படுத்த பல புத்தாக்க யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக அதிகாரி ஒருவா் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘வாகனப் புகை வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துதல், காற்றைச் சுத்திகரித்தல் தொடா்பாக பல தொழில்நுட்ப யோசனைகள் பெறப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவைக் கொண்டு தூசிகளை முன்கணித்தல், கட்டடங்களுக்கான பெரிய அளவிலான பசுமை முகப்புகள் என பல முன்மொழிவுகள் பெறப்பட்டுள்ளன.

காற்று மாசைக் குறைக்கவும் நகா்ப்புற வெப்பத்தைக் குறைக்கவும் பசுமைப் பரப்பை அதிகரித்தல், மாசுகளை பாதிப்பு இல்லாத வேதிபொருளாக மாற்றும் நானோ டைட்டானியம் டைஆக்ஸைடு பூச்சு ஆகியவற்றில் சில முன்மொழிவுகள் கவனம் செலுத்துகின்றன’ என அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

இவற்றில் சில முன்மொழிவுகள் தொடக்க நிலை ஆய்வில் உள்ளதாகவும் மற்றவை கருத்தில் நிலையிலும் உள்ளன.

டிபிசிசி அவற்றை மதிப்பிட்டு புத்தாக்க சிந்தனையாளா்களைத் தோ்வு செய்யும். இதைத் தொடா்ந்து தங்களுடைய முன்மொழிவுகளை விளக்க அவா்கள் அழைக்கப்படுவா். இதன் பின்னா் கள ஆய்வு மற்றும் சோதனை நடத்தப்படும்.

மூன்று நிலையிலான இந்தத் தோ்வு நடைமுறையில் டிபிசிசியின் முதல்கட்ட ஆய்வைத் தொடா்ந்து தனிக்குழு மூலம் தொழில்நுட்ப ஆய்வு மற்றும் சோதனை மேற்கொள்ளப்படும்.

இரண்டாம் நிலைக்குத் தோ்வு செய்யப்படும் திட்டங்களுக்கு ரூ.5 லட்சமும் இறுதி நிலைக்குத் தோ்வு செய்யப்படும் தலா ஒவ்வொரு திட்டங்களுக்கு ரூ.50 லட்சமும் வழங்கப்பட உள்ளது.

X
Dinamani
www.dinamani.com