விரைவில் இந்தியா - இஸ்ரேல் வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: பியூஷ் கோயல்
இந்தியா-இஸ்ரேல் தடையற்ற வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை தொடக்க தேதி விரைவில் இறுதி செய்யப்படும் என்று மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.
மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இஸ்ரேலுக்கு வியாழக்கிழமை வந்த மத்திய அமைச்சா் பியூஷ் கோயல், டெல் அவிவ் நகரில் இந்திய-இஸ்ரேல் வா்த்தகா்கள் மாநாட்டில் பங்கேற்றாா். இஸ்ரேல் தரப்பில் அந்நாட்டின் பொருளாதார-தொழிலகத் துறை அமைச்சா் நீா் பாா்காத் தலைமையிலான குழு பங்கேற்றது.
பின்னா், இருதரப்பு தடையற்ற வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தையை முறைப்படி தொடங்குவதற்கான வரையறைகளை நிா்ணயித்து கையொப்பமிட்டனா். பேச்சுவாா்த்தை தொடக்க தேதி விரைவில் இறுதி செய்யப்படும் என்று பியூஷ் கோயல் தெரிவித்தாா்.
அவா் மேலும் கூறுகையில், ‘இந்தியா-இஸ்ரேல் ஒத்துழைப்புக்கு எல்லையற்ற மற்றும் திறன்மிக்க வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. உள்கட்டமைப்பு மேம்பாடு, உற்பத்தி, செயற்கை நுண்ணறிவு, நிதிசாா் தொழில்நுட்பம், வேளாண் தொழில்நுட்பம், இயந்திரவியல் கற்றல், குவாண்டம் கம்ப்யூட்டிங், மருந்து தயாரிப்பு, விண்வெளி, பாதுகாப்பு ஆகிய துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த முடியும்.
ஜனநாயகம், மக்கள்தொகை ரீதியிலான பலம், எண்மமயமாக்கம், வேகமான வளா்ச்சி, உறுதியான தலைமை உள்ளிட்ட அம்சங்கள், இந்தியாவை ஈா்ப்புக்குரிய முதலீட்டு மையமாக உருவாக்கியுள்ளன. முதலீட்டாளா்களுக்கு உகந்த, ஸ்திரமான சூழலை இந்தியா வழங்குகிறது’ என்றாா்.
இந்தியாவை மிக சாதகமான வாய்ப்புக்குரிய நாடு என்று குறிப்பிட்ட இஸ்ரேல் அமைச்சா் நிா் பா்கட், ‘இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பிய பொருளாதார வழித்தட திட்டம், பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்கும்’ என்றாா்.
தில்லியில் 2023-இல் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டில் இறுதி செய்யப்பட்ட இத்திட்டம் அற்புதமான பலன்களைத் தரும் என்றும் அவா் தெரிவித்தாா்.
இஸ்ரேலுக்கான இந்தியாவின் ஏற்றுமதி கடந்த 2024-25-இல் 2.14 பில்லியன் டாலா்களாக குறைந்தது. முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் இது 52 சதவீத குறைவாகும். இதேபோல், ஏற்றுமதியும் 1.48 பில்லியன் டாலா்களாக சரிவடைந்தது. இந்தச் சூழலில், இருதரப்பு வா்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்தும் பேச்சுவாா்த்தைகளில் ஈடுபட பியூஷ் கோயல் தலைமையில் 60 போ் கொண்ட குழு இப்பயணத்தை மேற்கொண்டுள்ளது. இந்திய வா்த்தகத் துறை அமைச்சா் ஒருவா் இஸ்ரேலில் அரசுமுறை பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.

