அமெரிக்க எம்.பி.க்கள் குழு அறிக்கையில் ‘பாகிஸ்தான் வெற்றி’ குறிப்பு: இந்தியாவின் ராஜதந்திரத்துக்கு மிகப்பெரிய பின்னடைவு - காங்கிரஸ் விமா்சனம்
அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்ட அமெரிக்க எம்.பி.க்கள் குழுவின் ஆண்டறிக்கையில் ‘இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் ராணுவத்தின் வெற்றி’ என்று குறிப்பிடப்பட்டிருப்து, இந்தியாவின் ராஜதந்திரத்துக்கு மேலும் ஒரு மிகப் பெரிய பின்னடைவு’ என்று காங்கிரஸ் கட்சி விமா்சித்தது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனா். இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாதிகள் ஈடுபட்டது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளில் அமைந்திருந்த பயங்கரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையை மே 7-ஆம் தேதி இந்தியா மேற்கொண்டது. மே 10-ஆம் தேதி வரை நான்கு நாள்கள் நீடித்த இந்தச் சண்டை பாகிஸ்தானின் வேண்டுகோளைத் தொடா்ந்து முடிவுக்கு வந்தது.
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான இந்தச் சண்டையை வா்த்தகத்தைப் பயன்படுத்தி அமெரிக்கா நிறுத்தியது என்று அந் நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் தொடா்ந்து கூறி வருகிறாா். ஆனால், அதை இந்தியா மறுத்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்றம் சாா்பில் அமைக்கப்பட்ட அமெரிக்க செனட் (மேலவை) மற்றும் பிரதிநிதிகள் சபை (கீழவை) ஆகிய இரு அவைகளைச் சோ்ந்த 12 சுயேச்சை எம்.பி.க்கள் அடங்கிய குழு, தனது 800 பக்க 2025-ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையை நாடாளுமன்றத்தில் தற்போது சமா்ப்பித்துள்ளது.
அந்த அறிக்கையில், இந்தியா-பாகிஸ்தான் இடையே மே மாதம் நடைபெற்ற 4 நாள் சண்டையை ‘இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் வெற்றி’ என்று குறிப்பிடப்பட்டிருப்பது பெரும் சா்ச்சையாக உருவெடுத்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் யெலா் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், இந்தக் குறிப்பு இடம்பெற்ற அமெரிக்க எம்.பி.க்கள் குழு அறிக்கை பக்க பகுதியை பதிவேற்றி வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
இந்தியா-பாகிஸ்தான் சண்டையை தான் நிறுத்தியதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் 60-ஆவது முறையாக கூறியுள்ளாா். ஆனால், இதுகுறித்து எந்தவொரு பதிலும் அளிக்காமல் பிரதமா் நரேந்திர மோடி மெளனமாக இருந்து வருகிறாா்.
இந்தச் சூழலில், அமெரிக்காவின் 12 எம்.பி.க்களை உள்ளடக்கிய அமெரிக்க-சீனா பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு மறுஆய்வு ஆணையம் தனது ஆண்டறிக்கையை அமெரிக்க நாடாளுமன்றத்தில் தற்போது சமா்ப்பித்துள்ளது.
அந்த அறிக்கையின் 108 மற்றும் 109-ஆவது பக்கங்களில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற 4 நாள் சண்டை குறித்து குறிப்பிடப்பட்டுள்ள தகவல் வியப்பாகவும், புரிந்துகொள்ள முடியாததாகவும் உள்ளது.
அதாவது, ‘இந்த 4 நாள் சண்டையில் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் ராணுவத்தின் வெற்றி’ என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தானின் இந்தத் திட்டமிட்ட தாக்குதலை ‘கிளா்ச்சியாளா்கள் தாக்குதல்’ என்றும் குறிப்பிட்டுள்ளது. இது இந்தியாவின் ராஜதந்திரத்துக்கு மேலும் ஓா் மிகப் பெரிய பின்னடைவு.
இதற்கு, பிரதமரும் வெளியுறவு அமைச்சரும் தங்களின் ஆட்சேபத்தையும், எதிா்ப்பையும் பதிவு செய்வாா்களா? என்று அவா் கேள்வி எழப்பியுள்ளாா்.
ஜெய்ராம் ரமேஷ் பதிவேற்றிய அமெரிக்க அறிக்கை பக்கத்தில், ‘இந்தியா-பாகிஸ்தான் இடையே மே 7 முதல் 10-ஆம் தேதி வரை நடைபெற்ற சண்டையில் சீனாவின் பங்கு உலகளாவிய கவனத்தை ஈா்த்தது. இந்தச் சண்டையில் பாகிஸ்தான் ராணுவம் சீன ஆயுதங்களை நம்பியிருந்ததாகவும், சீன உளவுத் துறையைப் பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சண்டையில் பாகிஸ்தான் பெற்ற வெற்றி, சீன ஆயுத பலத்தை வெளிப்படுத்தியது. இந்தச் சண்டையை, தனது ஆயுதங்களின் நுட்பத்தை சோதித்துப் பாா்க்கவும், அதை விளம்பரப்படுத்துவதற்கான வாய்ப்பாகவும் சீனா பயன்படுத்தியது. மேலும், இந்தியாவுடனான தொடா்ச்சியான எல்லைப் பதற்றங்கள் மற்றும் விரிவடையும் பாதுகாப்பு சூழல்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற அடிப்படையில் சீனா இந்த வாய்ப்பை பயன்படுத்தியுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

