

பிகார் தேர்தலில் 2 லட்சத்திற்கும் அதிகமான தபால் வாக்குகளில் கிட்டத்தட்ட 24,000 நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையத் தரவுகள் காட்டுகின்றன.
பதிவான 5.02 கோடி மொத்த வாக்குகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தபால் வாக்குகள் உள்பட 4.93 கோடி வாக்குகள் செல்லத்தக்கவை என்றும் 9.34 லட்சம் வாக்குகள் செல்லுபடியற்றவை என்றும் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் பதிவான மொத்த 2.01 லட்சம் தபால் வாக்குகளில், 23,918 நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மொத்த தபால் வாக்குகளில் நிராகரிக்கப்பட்ட தபால் வாக்குகளின் சதவிகிதம் 11.87 சதவிகிதமாக உள்ளது. பிகார் சட்டப்பேரவைக்கு கடந்த நவ.6, 11-இல் இரு கட்டங்களாக தோ்தல் நடைபெற்றது. மொத்தம் 7.45 கோடி வாக்காளா்களைக் கொண்ட பிகாரில் வரலாறு காணாத அளவில் 67 சதவீத வாக்குகள் பதிவாகின.
ஆண்களைவிட (62.8%), பெண்கள் (71.6%) அதிகம் வாக்களித்தனா். தோ்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட ஐந்து கட்சிகள் அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி, 202 தொகுதிகளில் வெற்றி பெற்று, மாபெரும் பலத்துடன் ஆட்சியை மீண்டும் தக்க வைத்தது. பாஜக 89 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
ஐக்கிய ஜனதா தளம் 85, மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) 19, மத்திய அமைச்சா் ஜிதன் ராம் மாஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா 5, மாநிலங்களவை எம்.பி. உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரீய லோக் மோா்ச்சா 4 இடங்களைக் கைப்பற்றின என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.