

பெங்களூரு போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் மோசமான அனுபவம் என விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா நகைச்சுவையாகத் தெரிவித்தார்.
பெங்களூரு சர்வதேச கண்காட்சி மையத்தில் நடைபெற்ற 28வது பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாடு இன்று நிறைவடைந்தது.
இந்த மாநாட்டில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு சுமார் ரூ.400 கோடிவரை முதலீடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இந்த மாநாட்டில் சுமார் 56 நாடுகளைச் சேர்ந்த 20,000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். சுமார் 46,300-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் உள்பட சுமார் 92,500 பேர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த உச்சிமாநாட்டில் செய்யறிவு, தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், விண்வெளி, ஸ்டார்ட் அப் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகள் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன. இதில், 1,015 பேரின் தயாரிப்புகள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.
மூன்றுநாள்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் இந்திய விண்வெளி கேப்டன் சுபன்ஷு சுக்லா, எழுத்தாளரும் தொழில் முனைவோருமான அங்கூர் வாரிகு, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, செப்டோ இணை நிறுவனர் கைவல்யா வோஹ்ரா, கிரிக்கெட் வீராங்கனை ரிச்சா கோஷ், மனநல நிபுணர் சுஹானி ஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டு தங்களின் அனுபவங்கள் கலந்த கதைகளை அங்கு பகிர்ந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்று திரும்பிய இந்திய விண்வெளி கேப்டன் சுபான்ஷு சுக்லா, அங்கு குழுமியிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், “பெங்களூருக்கு அப்படியே நேரெதிராக இருக்கும் மராத்தஹல்லியில்(பெங்களூருவில் இருந்து 34 கி.மீ. தொலைவில் உள்ளது) இருந்து தொழில்நுட்ப உச்சி மாநாடு நடைபெறும் இடத்துக்கு வருவதற்கு வழக்கமாக ஒரு மணி நேரம் ஆகும்.
ஆனால், மேடையில் எனக்கு பேச வழங்கப்பட்ட நேரத்தை காட்டிலும், பயணம் செய்ய 3 மடங்கு நேரம் அதிகமாக ஆகியிருக்கிறது. அதனால், நீங்கள் என்னுடைய அர்ப்பணிப்பையும் பார்க்க வேண்டும்” என அவர் கூறியதும் அங்கு கூடியிருந்தவர்கள் சிரிப்பலையில் அரங்கமே அதிர்ந்தது.
விண்வெளிக்குச் சென்ற இந்திய வீரர் ராகேஷ் சா்மாவுக்குப் பிறகு 41 ஆண்டுகள் கழித்து விண்வெளிக்குப் பயணித்த 2-ஆவது இந்திய வீரர், சர்வதேச விண்வெளி நிலையத்தில் தடம் பதித்த முதல் இந்திய வீரர் சாதனைக்கு சொந்தக்காரரான சுபான்ஷு சுக்லா பேச்சுக்கு கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே பதிலளித்தார்.
இதுகுறித்து அமைச்சர் பிரியங்க் கார்கே பேசுகையில், “அவர் விண்வெளியில் இருந்து வருவது எளிது. ஆனால், மாரத்தஹள்ளியிலிருந்து வருவது கடினம்.. இனி இதுபோன்று மீண்டும் நடக்காது” என அவரிடம் உறுதியளித்தார்.
போக்குக் காட்டும் போக்குவரத்து நெரிசல்
சமீபகாலமாகவே, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியால் பெங்களூருவில் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல் தவிர்க்க இயலாத ஒன்றாகவே மாறியுள்ளது.
பெங்களூருவில் ஒரு வருடத்துக்கு சுமார் 117 மணி நேரத்தை போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கவே மக்கள் செலவிடுவதாகக் கூறப்படுகிறது.
நிகழாண்டின் முதல் ஆறுமாதங்களில் மட்டும் புதியதாக மூன்று லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள், புதிதாக வாங்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஜூன் மாதத்தில் மட்டும் 49,620 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதே நிலை தொடர்ந்தால், அடுத்தாண்டு துவக்கத்திலேயே வாகனங்களின் எண்ணிக்கை ஐந்து முதல் ஆறு லட்சத்தைத் தாண்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.